பக்கம் எண் :

பக்கம் எண்:1009

உரை
 
5. நரவாண காண்டம்
 
5. பத்திராபதி உருவுகாட்டியது
 
           அரசி னாகா தாணையி னாகாது
     10     விரைசெல லிவுளியொடு வெங்கண் வேழம்
           பசும்பொ னோடைப் பண்ணொடு கொடுப்பினும்
           விசும்பிடைத் திரிதரும் வேட்கை வெந்நோய்
           பொன்னிறை யுலகம் பொருளொடு கொடுப்பினும்
           துன்னுபு மற்றது துடைக்குந ரின்மையின்
     15     உறுகண் டீர்த்தோய்க் குதவியொன் றாற்றிப்
           பெறுகுவம் யாமெனப் பெயர்ப்பதை யறியேம்
 
                     (இதுவுமது)
               9 - 16 : அரசின்.........அறியேம்
 
(பொழிப்புரை) ''ஐய ! நீ செய்த அவ்வுதவி எனது அரசாட்சியினாலும் ஆற்றலாகாது; எனது கட்டளையினானும் ஆற்றலாகாது; அன்றியும் விரைந்து செல்லும் குதிரையும் தறுகண்மையுடைய யானையும் ஆகிய இவைகளைப் பசிய பொன்னாலாகிய முகபடாம் முதலியவற்றால் ஒப்பனை செய்து வழங்கினும், நிறைந்த பொன்னும் பொருளும் யாமாளும் உலகமும் ஒரு சேர வழங்கினும், எம்பால் வந்து வாசவதத்தை எய்தியிருந்த வானிலே சுற்றித் திரியும் விருப்பமாகிய வெவ்விய வயா நோயைத் தீர்ப்பார் யாருமிலர். அங்ஙனமிருப்பவும் வலியவந்து அத் துன்பத்தைத் தீர்த்துவிட்ட உனக்குக் கைம்மாறாக யாமும் ஓருதவியைச் செய்வேம் என்று கருதுமிடத்தும் அதற்குக் கைம்மாறாகத் தகுந்த தொன்றனை யாம் அறிகின்றிலேம்'' என்க.
 
(விளக்கம்) ஓடை - முகபடாம். பண் - பண்ணுறுத்தல். துன்னுபு - துன்னி. உறுகண் - துன்பம். பெயர்ப்பதை - கைம்மாற்றை.