பக்கம் எண் :

பக்கம் எண்:1011

உரை
 
5. நரவாண காண்டம்
 
5. பத்திராபதி உருவுகாட்டியது
 
           அருளெதிர் வணங்கி யதுவுங் கொள்ளான்
           பொருளெனக் கென்செயும் புரவல போற்றென
     25    என்முதல் கேளெனத் தொன்முத றொடங்கிச்
           சுருங்கா வாகத் தரம்பை தன்மையும்
           கருங்கோட்டுக் குறவர் கணமலை யடுக்கத்
           திரும்பிடி யாயங் கிற்ற வண்ணமும்
           ஒன்று மொழியாது நன்றியின் விரும்பி
 
            (பத்திராபதி தன் வரலாறு கூறுதல்)
               23 - 29 : அருள்..........ஒழியாது
 
(பொழிப்புரை) அது கண்ட அத்தச்சன் அம் மன்னவன் அருட் செயலுக்கெதிரே கைகுவித்து வணங்கி அவன் வழங்கும் அவ்வணிகலனை ஏற்றுக்கொள்ளானாய், 'புரவலனே ! என்னைப் போற்றியருளுக ! நீ வழங்கும் இப்பொருள் எனக்கு என்ன நன்மையைச் செய்ய வல்லது. இனி யான் என் வரலாற்றினைக் கூறக் கேட்டருளுக' என்று தன் வரலாற்றினைத் தொடக்க முதலாகச் சொல்லத் தொடங்கித் தான் பருத்த கொங்கைகளையுடைய பத்திராபதி என்னும் தெய்வப் பெண்ணாக இருந்த தன்மை முதலாகக் குறவர் வாழுகின்ற கரிய குவடுகளையுடைய கூட்டமான மலைகளின் பக்கத்தே கரிய பிடியானையாகத் தோன்றிப் பாலை நில வழியிலே நோயுற்று வீழ்ந்திறந்த நிகழ்ச்சி ஈறாக அமைந்த வரலாற்றில் ஒன்றனையும் விடாமல் கூறாநிற்ப என்க.
 
(விளக்கம்) அருள் - அருட்செயல். அதுவும் - அவ் வணிகலத்தினையும். புரவல : விளி. என்முதல் - என் வரலாறு. சுருங்கா ஆகம் - சுருங்காத கொங்கை. அரம்பை - தெய்வப்பெண். கணமலை - கூட்டமான மலை. இற்ற வண்ணம் - இறந் தொழிந்த தன்மை. கூறாநிற்ப என ஒரு சொல் வருவித்து முடிக்க.