(பொழிப்புரை) அற்றை
நாளிலே தான் மேற்கொண்டுள்ள தச்சவடிவினை அகற்றித் தனது பழைய தெய்வப் பெண்ணாகிய
பத்திராபதி உருவத்தை மேற்கொண்டு அம் மன்னவன் கண் கூடாகக் காணும்படி காட்டிப்
பின்னர்த் தனக் கெய்திய அந்த யானைப் பிறப்பின்கண் உள்ள விருப்பத்தால் அத்
தெய்வ மகள் விரும்பிக் கண்டோர் விழையும் பத்திராபதி என்னும் அப்பிடி யானையின்
உருவத்தையடைந்து வானில் ஏறி ஆங்கு முகிலின் மேல் இனிதாக நடந்து அவ் வத்தவ நாட்டு
மன்னன் வளமிக்க தன் அரண்மனை வாயிலுக்கு அப் பத்திராபதியின் பெயரையிட்டு நாள்
தோறும் வாயில் காவலரோடு வழிபடாநிற்கும்படி ஒப்பனை செய்த அணிகலங்களையுடைய அப்
பத்திராபதி நங்கை தன் நகருக்குச் சென்றனள் என்க.
(விளக்கம்) தான் கொண்ட உருவு -
தான் மேற்கொண்ட தச்ச வடிவம். தன்னமருருவம் - தனது தெய்வவடிவம். விஞ்சைமகள் -
விச்சாதரப் பெண். எழிலி - முகில். கொளீஇ - இட்டு. வத்தவன் : உதயணன். புனையிழை :
பத்திராபதி.