பக்கம் எண் :

பக்கம் எண்:1015

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          புனையிழை தன்னகர் புக்கபி னிப்பால்
          துனைசேர் நெடுந்தேர் துவன்றிய தானை
          வத்தவர் பெருமகன் வானோர் விழையும்
          அத்தகு சிறப்பி னவந்தியன் மடமகள்
     5    உசாவி னன்ன நுண்ணிடை யுசாவினைப்
          பேதைக் குரைப்போன் பிழைப்பிற் றாகிய
          பொற்பமை சுணங்கிற் பொம்மல் வெம்முலைப்
          பட்டத் தேவியைப் பதுமையி னீக்கி
          முட்டில் செல்வமொடு முறைமையிற் பிழையா
     10    தொழுகா நின்ற வழிநாட் காலைப்
 
                 (நரவாணன் பிறத்தல்)
              1 - 10 : புனையிழை............காலை
 
(பொழிப்புரை) பத்திராபதி தனது தெய்வ நகரத்திற்குச் சென்ற பின்பு இங்குக் கோசம்பி நகரத்தின்கண் விரைவினையுடைய நெடிய தேர்கள் செறிந்த படையினையுடைய வத்தவ மன்னனாகிய வுதயணன், தேவரும் விரும்புதற்குக் காரணமான அழகு தக்கிருக்கின்ற சிறப்பினையுடைய அவந்தி நாட்டரசனாகிய பிரச்சோதனனுடைய மடப்பமுடைய மகளும் நுண்மாண் நுழை புலனால் ஆராயப்படுகின்ற நுண்பொருள் போன்று மிகவும் நுண்ணிதாகிய இடையினையும் அத்தகைய தனது நுண் மாணுழைபுலனால் ஆராயப்பட்ட நுண்பொருளை யாதொன்று முணராத அறிவிலிக்கு உறஉறக் கூறுவயின் ஒருவன்கட் குற்றம் பெருகுமாறு பெருகியதாய்ப் பொலிவுடைய தேமலையுமுடைய பெரிய விரும்புதற்குக் காரணமான முலையினையும் உடைய தன் பட்டத்தேவியும் ஆகிய வாசவதத்தையினைப் பதுமாபதியினின்றும் விலக்கித் தனி மாளிகையிலே வைத்து அவளை முட்டுப் பாடில்லாத செல்வ வளமுடையளாய்க் கருவுற்றிருக்கும் மகளிரைப் பேணுதற்குரிய முறைமையிற் றவறின்றிப் பேணி வருகின்ற காலத்தே என்க.
 
(விளக்கம்) புனையிழை : பத்திராபதி. துனை - விரைவு. துவன்றிய செறிந்த. அ - அழகு. அவந்தியன் : பிரச்சோதனன். பெருமகன் தேவியைப் பதுமையினீக்கிச் செல்வமொடு முறைமையிற் பிழையாது ஒழுகாநின்ற காலை என்க. பெருமகன் : உதயணன். வானோர் விழையும் அவந்தி என்க. உசாஅ - ஆராய்ச்சி. ஈண்டு ஆகுபெயராய் ஆராய்ச்சியிற் றெளிந்த நுண்பொருளைக் குறித்து நின்றது. நுண் மாணுழைபுலமுடைய ஒருவன் அரிதின் ஆராய்ந்து கண்ட நுண்பொருளைப் பேதைக்குரைக்குங்கால் அவன் அதனை யுணரமாட்டாமல் தான் உணர்ந்ததனையே அதுவாகக் கொள்வன் அன்றோ? அவ்வழி அக்குற்றம் அவ்வாராய்ச்சியாளன் பாலதேயாய்ப் பெருகுமன்றோ அங்ஙனம் பெருகிய முலை என்றவாறு. ''கற்றன கல்லார் செவிமாட்டிக் கையறூஉங் குற்றம் தமதே பிறிதன்று'' எனப் பிற சான்றோருங் கூறுதல் காண்க. ''காணாதாற் காட்டுவான், றான்காணான் காணாதான் கண்டானாந் தான் கண்ட வாறு'', என வருந் திருக்குறளுங் காண்க. இனி ''உசாவினன்ன நுண்ணிடை உசாவினைப் பேதைக் குரைப்போன் பிழைப்பிற்றாகிய வெம்முலை'' என்னு மிதனோடு.

  ''அவாப்போ லகன்றத னல்குன்மேற் சான்றோர்,
   உசாப்போல வுண்டே மருங்குல்--உசாவினைப்
   பேதைக் குரைப்பான் பிழைப்பிற் பெருகினவே
   கோதைக்கொம் பன்னாள் குயம்''

என வரும் பழம்பாடலையும் (யா - கா. ஒழிபு) ஒப்புநோக்குக

கோமகளிர் கருவுற்றிருக்கும் அமையத்தே அவர்தம் சக்களத்தியர் பானின்றும் விலக்கிவைத்துப் பேணல் வேண்டும் என்பது அரசியல் விதி. இவ்விதிபற்றிப் பதுமையின் நீக்கி என்று கூறப்பட்டது. சிறப்புப் பற்றிப் பதுமையை மட்டும் கூறினாரேனும் சக்களத்தியர் பானின்றும் விலக்கி எனப் பொதுமையிற் கொள்க. பதுமை - பதுமாபதி. முறைமை. கருவுற்ற மகளிரைப் பேணுமுறை என்க.