உரை |
|
5. நரவாண காண்டம் |
|
6. நரவாணதத்தன் பிறந்தது |
|
பிறைபுரை
திருநுத லஃகப் பிறையின்
குறைவிடந் தீர்ந்த கொள்கை
போலத் திருவயிற்று
வளர்ந்த திங்க
டலைவர ஒருமையிற்
றீயவை நீங்கப் பெருமையின் 15
முழுநோக் காக வைம்பெருங் கோளும்
வழுவா வாழ்நாண் மதியொடு
பெருக்கிப்
பெருஞ்சிறப் பயர்வர நல்கி
யொழிந்துழி
நோக்கி மற்றவை யாக்கம் பெருகப்
|
|
(இதுவுமது)
11 - 18 : பிறை............பெருக |
|
(பொழிப்புரை) பிறையாகத்
தோன்றிய திங்கள் நாடோறும் வளர்ந்து தனது குறையிடம் நிரம்பி முழுமதியானாற்போன்று
தேவியின் திருவயிற்றிற் கருவாகி உருப்பெற்று நாடோறும் வளர்ந்த (அந்தரவிசும்பின்
ஆழிக்கிழவனாகும், 30.) மகவிற்குப் பத்துத் திங்களும் நிரம்புதலாலே வயாவருத்தத்தாலே
தேவியினது பிறையை யொத்த அழகிய நெற்றி சுருங்கா நிற்பவும், தீக்கோள்கள் ஒரு சேர
நீங்காநிற்பவும் நற்கோள்கள் ஐந்தும் சிறப்பான இடங்களினமைந்து அம்மகவிற்குக்
குறையாத வாழ்நாளையும் அறிவையும் பெருக்கிப் பெருஞ்சிறப் புண்டாக அருள் வழங்கி
ஒழிந்த இடங்களினும் ஏனைய தீக்கோள்களையும் நோக்கி அவற்றாலும் அம்மகவிற்கு ஆக்கமே
பெருகாநிற்கச் செய்தலாலே என்க.
|
|
(விளக்கம்) தல் வயாவருத்தத்தால்
அஃகவென்க. அஃகுதல், சுருங்குதல். வளர்ந்த அழிக்கிழவன் (30) என்க. பிறை நாடொறும்
வளர்ந்து குறைவிடம் தீர்ந்த கொள்கை போல என்க. தலைவர - நிரம்ப. ஒருமையில் -
ஒருசேர. தீயவை - தீக்கோள்கள். அவை செவ்வாய், சனி, இராகு, கேது என்பன.
ஐம்பெருங்கோள் - ஞாயிறு திங்கள் புதன் வியாழன் வெள்ளி என்பன. மதி - அறிவு.
ஒழிந்துழி - ஏனைய இடங்களையும் நோக்கி. மற்றவை - மற்றையவற்றாலும். அவற்றின்
பயனாகிய தீங்குகள் இன்றித் தம்பார்வையின் பயனாகிய ஆக்கமே பெருகா நிற்பச்
செய்தலாலே என்க.
|