பக்கம் எண் :

பக்கம் எண்:1020

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          ஆயுட் டானம் யாவையென் னாது
    40    மேயவை யெல்லாங் காவலன் வீசி
          முத்துமணற் பரந்த நற்பெருங் கோயில்
          முற்றந் தோறு முழங்குமுர சியம்பப்
          பொலிகெனு மாந்தர்க்குப் புறங்கடை தோறும்
          மலிபொன் மாசையு மணியு முத்தும்
    45    ஒலியமை தாரமு மொளிகால் கலங்களும்
          கோடணை யியற்றிக் கொடையொடு புரிகென
          ஆய்புகழ் வேந்த னேயின னாகிக்
 
                   (இதுவுமது)
            39 - 47 : ஆயுள்............ஏயினனாகி
 
(பொழிப்புரை) நெடிய ஆயுள் உண்டாதற் பொருட்டு வழங்குந் தானத்தை எப்பொருள் வழங்கவேண்டும் என்று ஆராயாமல் அந்தணர் விரும்பிய பொருளை யெல்லாம் அம்மன்னவன் பெரிதும் வழங்கி மேலும் முத்தாகிய மணல்பரப்பிய நம் அரண்மனை முன்றில் தோறும் அறமுரசம் முழங்காநிற்ப நம்மகவினைப் ''பொலிக'' என்று வாழ்த்தாநின்ற மாந்தர்க் கெல்லாம் அவ்வாயில் தோறும் மிக்க பொன்னாலியன்ற மாசைகளையும் மணிகளையும் முத்தையும் ஒலியுடைய பல பண்டங்களையும் ஒளி வீசாநின்ற அணிகலன்களையும், வழங்கும் செய்தியை எல்லோருமறிய முரசறைந்து தெரிவித்துக் கொடையாக வழங்குக! என்று அழகிய புகழையுடைய அவ்வேந்தன் திணை மாந்தர்க்குக் கட்டளையிட்டனனாய் என்க.
 
(விளக்கம்) ஆயுட்டானம் - ஆயுள் நீளவேண்டும் என்று வழங்கும் தானம். மேயவை - விரும்பியவை. காவலன் - சுட்டு மாத்திரையாய் நின்றது. பொன் மாசை - ஒருவகைப் பொற்காசு. ஒலியமை தாரம் என்றது, உலோகத்தாலியன்ற அடிசிற்கல முதலியவற்றை. கோடணை இயற்றி - முரசறைந்து அறிவித்து.