பக்கம் எண் :

பக்கம் எண்:1021

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          கொலைச்சிறை விடுக தளைச்சிறை போக்குக
          கொற்றத் தானையொடு கோப்பிழைத் தொழுகிய
    50    குற்ற மாந்தருங் கொடிநகர் புகுதுக
          அருங்கடி நகரமு நாடும் பூண்ட
          பெருங்கடன் விடுக விருங்கடல் வரைப்பின்
          நல்குர வடைந்த நசைசா லாடவர்
          செல்ல றீரவந் துள்ளியது கொள்க
 
                     (இதுவுமது)
              48 - 54 : கொலைச்.........கொள்க
 
(பொழிப்புரை) கொலைக் குற்றத்தின் பொருட்டுச் சிறை வைக்கப்பட்டோரைச் சிறைவீடு செய்க!  என்றும், ஏனைக் குற்றத்தின் பொருட்டு விலங்கிட்டுச் சிறை வைக்கப்பட்டோரையும் விடுக! என்றும், வெற்றியுடைய நம் படைகளிடத்தும் மன்னனிடத்தும் குற்றம் செய்தமையால் நாடு கடத்தப்பட்ட மாக்களும் மீண்டும் நமக்குக் கேளிராய் அஞ்சாமல் நமது கொடிக் கோசம்பி நகரத்தின்கண் புகுதுவாராக. அரிய காவலையுடைய நகர்வாழ் மாந்தரும் நாட்டில் வாழ்கின்ற மாந்தரும் கடமை பூண்டுள்ள பெரிய இறைப்பொருளை அவர்பாற் கொள்ளாது விடுக! என்றும், பெரிய கடல் சூழ்ந்த நில உலகத்தின்கண் வறுமையடைந்த அவாமிக்க ஆடவர்கள் தமது வறுமைத்துயர் தீரும்படி ஈங்கு வந்து அவர் கருதிய பொருளைப் பெற்றுக் கொள்க ! என்றும் என்க.
 
(விளக்கம்) கொலைச் சிறை - கொலை செய்தமையால் சிறையிடப்பட்ட குற்றமாந்தர். தளை - விலங்கு. தானைக்கும் கோவிற்கும் பிழைத்தொழுகிய குற்றமாந்தர் என்க. கொடிநகர் புகுதுக என்றமையால் இவர் நாடு கடத்தப்பட்டோர் என்பது பெற்றாம். கடன் - கடமைப்பொருள்.
நசை - பொருள்களின் மேற்செல்லும் விருப்பம். இஃதில்லார்க்கு நல்குரவும் இல்லை. ஆதலின் நல்குரவடைந்த நசைசால் ஆடவர் என்றார். செல்லல் - துன்பம். உள்ளியது - நினைந்த பொருள். மன்னர்க்கு மகப்பேறுண்டாய பொழுது இங்ஙனம் சிறைவீடு செய்தலும் திறைவீடு செய்தலும் மரபு இதனை,

 'கறைபன் னீராண் டுடன்விடுமின்
   காமர்சாலை தளிநிறுமின்
  சிறைசெய் சிங்கம் போன்மடங்கிச்
   சேரா மன்னர் சினமழுங்க
  உறையுங் கோட்ட முடன்சீமி
   னொண்பொற் குன்றந் தலைதிறந்திட்
  டிறைவன் சிறுவன் பிறந்தானென்
   றேற்பார்க் கூர்தோ றுய்த்தீமின்' (சீவக. நாமக. 3061)

எனவரும் சிந்தாமணியானும் உணர்க.