பக்கம் எண் :

பக்கம் எண்:1023

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          மன்னிய சும்மையொடு மகாஅர் துவன்றி
    65    வல்லோர் வகுத்த மாடந் தோறும்
          நல்லோ ரெடுத்த பல்பூம் படாகை
          ஈர்முகி லுரிஞ்சி யெறிவளிக் கெழாஅச்
          சீர்மைய வாகிச் சிறந்துகீ ழெழுந்த
          நேர்துக ளவித்து நிரந்துடன் பொலிய
    70    மையார் யானை மன்னரொடு மயங்கி
          நெய்யாட் டரவமு நீராட் டரவமும்
          மறப்போ ருதயணன் மகிழ்ந்த பின்னர்ப்
 
                     (இதுவுமது)
             64 - 72 : மன்னிய............பின்னர்
 
(பொழிப்புரை) வீதிகளிலெல்லாம் இளம் சிறாஅர்கள் நிலை பெற்ற மகிழ்ச்சி ஆரவாரத்தோடு வந்து கூடாநிற்பவும் தொழில் வல்லோர் இயற்றிய மேனிலை மாடந்தோறும் மகளிர் உயர்த்திய பல்வேறுவகைப் பூக்களாலியன்ற கொடிகள் வானத்தின்கண் இயங்கும் வீரமுடைய முகில்களை உராஞ்சி வீசுகின்ற காற்றிற்கு எழுந்து ஆடாத தன்மையையுடையனவாய்ச் சிறப்புற்றுக் கீழே வீதியிலெழுந்த நுண்ணிய துகள்களைத் தம்பானின்றும் சிந்தும் தேன் துளிகளாலும் நீர்த்துளிகளாலும் அவித்து ஒருசேர நிரல்பட்டுப்  பொலிவுறாநிற்பவும் அஞ்சனமெழுதப்பட்ட யானையையுடைய அரசர்களோடே கூடி மறப்பண்புமிக்க போரினையுடைய உதயணமன்னன் அரண்மனைக்கண் நிகழும் நெய்யாடுதல் ஆரவாரத்தானும் நீராடுதல் ஆரவாரத்தானும் பெரிதும் மகிழ்ந்த பின்னர் என்க.
 
(விளக்கம்) சிறுவர்கள் ஆரவாரிக்குங்கால் இடையறாது ஆரவாரித்தல் இயல்பாகலின் மன்னிய சும்மை என்றார். சும்மை - ஆரவாரம். துவன்றி - துவன்ற. நல்லோர் - மகளிர். பூம்படாகை - பூவாலியற்றிய கொடி. ஈர்முகில் - ஈரமுடைய முகில். மலரால் இயன்று முகிலும் தோய்ந்திருத்தலின் அக்கொடிகள் வளிக்கு எழாவாயின என்க. பூங்கொடியாகலானும் முகில் உராய்தலானும் தேனும் நீரும் துளித்து அக்கொடிகள் கீழெழுந்த துகளவித்தன என்க. மை - அஞ்சனம். மகப்பேற்றின் பொருட்டு நெய்யாட்டரவமும் நீராட்டரவமும் உண்டாயின என்க.