பக்கம் எண் :

பக்கம் எண்:1024

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          பிறந்த நாளும் பெற்ற மூர்த்தமும்
          சிறந்த நற்கோ ளுயர்ந்துழி நின்று
    75    வீக்கஞ் சான்றதும் விழுப்ப மறாத
          ஆக்கஞ் சான்ற வாருயி ரோகையும்
          நோக்கி யவரு நுகருஞ் செல்வத்
          தியாண்டுந் திங்களுங் காண்டகு சிறப்பிற்
          பக்கமுங் கோளு முட்கோ ளளைஇ
    80    இழிவு மிவையென விசைய நாடி
          வழியோ ரறிய வழுவுத லின்றிச்
          சாதகப் பட்டிகை சாலவை நாப்பண்
          அரும்பொறி நெறியி னாற்ற வமைத்த
          பெருங்கணிக் குழுவுக்குப் பெறுதற் கொத்த
    85    ஈரெண் கிரிசை யியல்புளி நடாஅய்
 
            (மகவிற்குப் பிறந்தநாள் கணித்தல்)
              73 - 85 : பிறந்த............நடாஅய்
 
(பொழிப்புரை) அம்மகவு பிறந்த நாளையும் அதனைத் தாய் ஈன்ற முழுத்தத்தையும் அப்பொழுது சிறந்த நல்ல கோள்கள் உயர்ந்த இடத்தில் நின்று பெருமையுற்றதனையும் சிறப்பறாத ஆக்கமுடைய அரிய உயிரினங்களின் மகிழ்ச்சியையும் அரண்மனைப் பெருங்கணிமாந்தர் நுண்ணிதின் நோக்கி இன்பம் நுகர்தற்குரிய செல்வத்தையுடைய யாண்டும் திங்களும் ஆராயத்தகுந்த சிறப்பினையுடைய பக்கமுங் கோள்களும் என்னும் இவற்றை ஆராயும் உட்கோளுடையராய்த் தீய கோள்களின் தீமைகள் இவையென்று பொருந்த ஆராய்ந்து பின்னோர் அறியும்படி தவறின்றி எழுதிய சாதகப் பத்திரிகையை நிரம்பிய அரசவை நடுவண் கொணர்ந்து அரசருடைய இலச்சினையை முறையாக இடுதற்கு வைத்த பெரிய அவ்வரண்மனைக் கணிவர் கூட்டத்திற்கு அவர் பெறுவதற்குத் தகுந்த பதினாறு வகைப்பட்ட கிரியைகளையும் முறையாக நடத்தி என்க.
 
(விளக்கம்) மூர்த்தம் - முகூர்த்தம். ஓகை - உவகை. அவரும் கணிமாந்தரும். செய்யுளாகலின் சுட்டு முன்வந்தது. வழியோர் - பின் வருவோர். சாதகப்பட்டிகை - சாதகமெழுதிய பத்திரிகை. அரண்மனைக் கணிமாந்தரைப் பெருங்கணி என்றல் மரபு.