பக்கம் எண் :

பக்கம் எண்:1028

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          உறுவிறற் றானை யுருமண் ணுவாவும்
          அறிநரை வழிபட் டன்றே பெயர்தலின்
           ..................................................................
          பொருவின் மாக்கள் பூதியென் றுரைஇ
          ஒழிந்த மூவ ருருவார் குமரருட்
    115    கழிந்தோ ரீமத்துக் கட்டழல் சேர்ந்த
          கரியக லேந்திக் காவயிற் பெற்றோன்
          அரிசிக னாகப் பெயர்முதல் கொளீஇப்
          பயந்தலை நிற்கும் பல்கதிர்ச் செல்வன்
          நயந்துதரப் பட்டோன் றவந்தக னாமெனத்
    120    தாயர் போலத் தக்கது நாடிய
          ஆவழிப் படுதலி னாகிய விவனே
          கோமுக னென்று குணங்குறி யாக
          மற்றவர் மகிழ்ந்து...........................
 
        (உருமண்ணுவா முதலியவரின் மக்களுக்குப் பெயரிடல்)
                111 - 123 : உறுவிறல்.........மகிழ்ந்து
 
(பொழிப்புரை) மிக்க ஆற்றலுடைய படைகளையுடைய உருமண்ணுவாவும் துறவோரை வழிபட்டமையாலே வந்து பிறந்ததனால்.................................ஒப்பற்ற சான்றோர் (அவன் மகவிற்கு) பூதி என்று பெயரிட்டு எஞ்சிய மூன்று அமைச்சர்களுடைய அழகமைந்த மைந்தர்களுள் வைத்து ஒருவனுக்கு இறந்தோர்க்குரிய ஈமக் காட்டின்கண் எரியும் மிக்க நெருப்பினைச்சேர்ந்த கரிய அகலைக் கையிலேந்தி அக்காட்டின்கண் நோன்பு செய்து பெறப்பட்டமையால் அரிசிகன் என்று பெயரிட்டு மற்றொருவன் உலகிற்குப் பயன் தருதலிலே தலை சிறந்து நிற்கும் பலவாகிய கதிர்களையுடைய ஞாயிறு விரும்பித் தரப்பட்டோனாதலின் தவந்தகன் என்று பெயரிட்டு மூன்றாம் மகவு உயிர்கட்குத் தாயர்போல நன்மையே நாடிய ஆவினை வழிபாடுசெய்து பெறப்பட்டமை நோக்கி இவன் கோமுகன் என்று பெயரிட்டு அம்மக்களுக்குப் பிறந்த தன்மையையே காரணமாகக் கொண்டு பெயர் வழங்காநிற்ப அதுகேட்டு உதயணனை உள்ளிட்ட தந்தைமார் நால்வரும் மகிழ்ந்து........................ என்க.
 
(விளக்கம்) உறு : உரிச்சொல். மிகுதி என்னும் பொருட்டு. பூதி : உருமண்ணுவா மகன் பெயர். மூவர் - இடவகன், வயந்தகன். இசைச்சன். அம்மூவருடைய மக்களுக்கும் அரிசிகன், தவந்தகன், கோமுகன் எனப்பெயரிட்டு என்பது கருத்து. மற்றவர் - தந்தைமார் நால்வரும். இப்பகுதியில் 112 ஆம் அடியையடுத்து ஓரடிமுழுதும் 123 ஆம் அடியின்கண் இறுதிச்சீர் இரண்டும் அழிந்தன.