பக்கம் எண் :

பக்கம் எண்:1029

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
          .....................தொன்னக ராளரும்
    125    பெற்றனம் பண்டே பெருந்தவ மென்மரும்
          இன்னோ ரன்ன வெடுத்துரை சொல்லித்
          தன்னோ ரன்ன தன்மைய னாகி
          மதலை மாண்குடி தொலைவழி யூன்றும்
          புதல்வற் பெற்ற னெனப்புகழ் வோரும்
    130    உதவி நண்ணரு முதயண குமரன்
          போகமும் பேரும் புகழ்மேம் பட்டதும்
          ஆகிய வறிவி னரும்பெறற் சூழ்ச்சி
          யூகியி னன்றோ வெனவுரைப் போரும்
          குறிகோட் கூறிய நெறிபுகழ் வோரும்
 
             (நகரமாந்தர் மகிழ்ந்து கூறல்)
          124 - 134 : தொன்னகர்............புகழ்வோரும்
 
(பொழிப்புரை) ..................பழைய அக்கோசம்பி நகரத்திலுள்ள மாந்தர்களும் மகிழ்ந்து யாமெல்லாம் இம்மகவினை அரசனாகப் பெறுதற்கு முற்பிறப்பிலேயே பெருந்தவம் செய்து அதன் பயனை இப்பொழுது பெற்றேம் என்று கூறுவாரும் இன்னோரன்ன பாராட்டுரை பலவற்றை எடுத்துக் கூறி மாட்சிமையுடைய நம்மரசர் குடி அழியுங் காலமும் அழியாமல் நிலை நிறுத்தும் ஊற்றுக்கோலாய் நம் மன்னவன் சிறந்த புதல்வனைப் பெற்றான் என்று புகழ்வோரும், தனக்கு உதவி தேடிப் பிறர்பால் செல்லுதலில்லாத இவ் வுதயணகுமரன் இன்ப நுகர்ச்சியாலும் புகழுடைமையாலும் பலரும் புகழும் மேம்பாட்டினை எய்தியது ஆக்கமுடைய அறிவினையும் பெறல் அரிய சூழ்ச்சியினையும் உடைய யூகி என்னும் அமைச்சனா லன்றோ என்று அவ்வமைச்சனைப் புகழ்வோரும், பண்டு இங்ஙனம் ஒரு நன் மகவு பிறக்கும் என்று நிமித்தம் கூறிய நெறியினைப் புகழ்வோரும் என்க.
 
(விளக்கம்) இப் பகுதியில் 124 - ஆம் அடியின் முதல் இரண்டு சீர்கள் அழிந்தன. பண்டே தவமுடையேன் அதனால் பெற்றனம் என மாறி ஒருசொற்பெய்து கொள்க. மதலை - ஊற்றுக்கோல். 'மதலை மாண்குடி தொலைவழி யூன்றும் புதல்வர்ப் பெற்றான்' என்னுமிதனோடு,

   'சிதலை தினப்பட்ட வால மரத்தை
   மதலையாய் மற்றதன் வீழூன்றி யாங்குக்
   குதலைமை தந்தைகட் டோன்றிற்றான் பெற்ற
   புதல்வன் மறைப்பக் கெடும்' (நாலடி - 197)

எனவரும் வெண்பாவினையும் நோக்குக. குறிகோள் - நிமித்தம்.