பக்கம் எண் :

பக்கம் எண்:103

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
           ஆண்கட னகற லதுநோன் றெழுகுதல்
           மாண்பொடு புணர்ந்த மாசறு திருநுதற்
           கற்புடை மகளிர் கடனெனக் காட்டி
     10    வினைக்கும் பொருட்கு நினைத்துநீத் துறையுநர்
           எல்லை கருதிய திதுவென மெல்லியற்
           பணைத்தோண் மகளிர்க்குப் பயிர்வன போல
           மனைப்பூங் காவின் மருங்கிற் கவினிய
           பைந்தார் முல்லை வெண்போது நெகிழ
 
                 (மாலைக் காலம்)
               7 - 14 : ஆண்.........நெகிழ
 
(பொழிப்புரை) உலகின்கண் ஆடவர்க்குப் போர் கருதியாதல்
  பொருளீட்டல் கருதியாதல் காதலியைப் பிரிந்துபோதல்
  கடமையாகும். மனைமாட்சியோடு பொருந்திய குற்றமற்ற
  அழகிய நுதலையுடைய கற்புடைய மகளிர்கடன் அப்பிரிவுத்
  துயரைப்பொறுத்து ஒழுகுதலேயாம் என்று குறிப்பாகக்காட்டிப்
  போர்க்கும் பொருளுக்குமாக நுங்களைப் பிரிந்துபோய்ச்
  சேய்மையில் உறைகின்ற நுங்காதலர் தாம் மீண்டு நும்பால்
  வருதற்கு எல்லையாகக் கருதியபொழுது இந்த மாலைப்பொழுதே
  காண் என்று, மெல்லியலையும் பருத்த தோள்களையுமுடைய
  அந்தமகளிர்க்கு நினைவூட்டுவனபோன்று மனைப்படப்பை
  வேலியிற் படர்ந்து அழகுற்ற பசிய மாலைபோன்று செறிந்த
  முல்லையினது வெள்ளிய அரும்புகள் மலராநிற்ப வென்க.
 
(விளக்கம்) ஆண் - ஆடவர். அது - அப்பிரிவினை.
  நோன்று- பொறுத்து. மாண்பு-மனை மாண்பு. வினை-போர். நீத்து -
  பிரிந்துதாம் மீண்டு வருவதாகக் குறிப்பிட்ட எல்லை. பயிர்வன -
  அறிவிப்பன. மனைப்பூங்கா - வீட்டைச் சூழ்ந்துள்ள தோட்டம்.
  பசியதார் போன்று செறிந்தபோது என்க.