பக்கம் எண் :

பக்கம் எண்:1031

உரை
 
5. நரவாண காண்டம்
 
6. நரவாணதத்தன் பிறந்தது
 
         
    140    நகரத் தாளரொடு நாடுபுகழ்ந் தேத்த
          நிகரில் செல்வத்து நிதியந் தழீஇ
          யாப்புடை மகன்வயிற் காப்புடன் புரிகென
          விதியறி மகளிரொடு மதிபல நவின்ற
          மருந்துவகுப் பாளரைப் புரந்துறப் பணித்துத்
    145    தளர்வி லூக்கந் தலைத்தலை சிறப்ப
          வளரு மாதோ வைகறொறும் பொலிந்தென்.
 
                      (இதுவுமது)
             140 - 146 : நகரத்............பொலிந்தென்
 
(பொழிப்புரை) நகர்வாழ் மாந்தரும் நாட்டின்கண் வாழுவோரும் புகழ்ந்து தன்னைப் பாராட்டெடுப்ப அம்மன்னவன் தனக்கு நிகரில்லாத செல்வமாகிய நிதிகள் அனைத்தையும் ஒருங்கே பெற்று அன்புடைய தன் மகன் நரவாணதத்தனிடத்தே காப்பொடு அவனுக்கு ஆவன செய்க என்று மகவளர்ப்பு நெறியறி மகளிர் பலரோடும் அறிவுநூல் பலவற்றைப் பயின்ற மருத்துவத் தொழிலாளர் பலரையும், அம் மகவினைப் பேணிவருமாறு கட்டளையிட்ட பின்னர் அம்மகன் தளர்தலில்லாத ஊக்கம் எல்லாத் துறைகளினும் சென்று மிக ஓங்குமாறு நாள்தோறும் பொலிவுற்று வளர்வானாயினன் என்க.
 
(விளக்கம்) நாடு: ஆகுபெயர். செல்வத்து நிதியம் - செல்வமாகிய நிதியம். அத்துச்சாரியை அல்வழிக்கண் வந்தது. விதி - மகவளர்ப்பு முறை. மதி நூல்; ஆகுபெயர். மருந்துவகுப்பாளர் - மருத்துவர். அம்மகன் வைகல்தொறும் பொலிந்து வளரும் என்க.

              6. நரவாணதத்தன் பிறந்தது முற்றிற்று.