உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
பொலிந்த
செல்வமொடு புகழ்மீக் கூரி
மலிந்த திருவின் வத்தவர்
பெருங்குடி உண்மகி
ழுவகை யூக்க மிமிழப்
பண்மகிழ் பேரியாழ் பயிற்றிய
கேள்வி 5 உலைவில் வென்றி யுதயண
குமரற்கு நலமிகு
புதல்வ னன்னாட் பிறந்த
உகவை மாற்ற முஞ்சையம்
பெருநகர்ப் பகையடு
வேந்தற்குப் பணிந்தன னுரைப்பத் |
|
(பிரச்சோதனன் நரவாணதத்தன் பிறந்ததை
அறிதல்)
1 - 8 : பொலிந்த...........உரைப்ப |
|
(பொழிப்புரை) பொலிவுடைய
செல்வப் பெருக்கத்தோடே அச்செல்வத்தின் பயனாகிய புகழானும் நிரம்பி எல்லாப்
பேறுகளும் மிக்க வத்தவர் மன்னருடைய பெரிய குடியானது நரவாணன் என்னும்
இம்மகப்பேற்றினாலே எல்லோரும் அகமகிழ்தற்குக் காரணமான புதிய வுவகையின்கண்
மிகாநிற்ப இசையின் பத்தாலே மகிழ்தற்குரிய பேரியாழ் வித்தையை நன்கு பயின்று அக்
கேள்வியானுஞ் சிறந்த கெடாத வெற்றியையுடைய உதயண மன்னனுக்கு நலமிகுதற்குக் காரணமான
நல்லதொரு நாளிலே பிறந்த அன்பு மிகும் செய்தியைக் கொண்டு சென்ற தூதுவன் உஞ்சை
மாநகரத்தே சென்று தன் பகைவரைக் கொன்றழிக்கும் பேராற்றல் படைத்த பிரச்சோதன
மன்னனைக் கண்டு வணங்கிக் கூறாநிற்ப என்க. |
|
(விளக்கம்) மீக்கூரி - மிகுந்து. மலிந்த - மிக்க.
உவகை யூக்கம் - மகிழ்ச்சியாலுண்டாகும் புதிய மனக்கிளர்ச்சி. இமிழ - உண்டாக்க.
பயிற்றிய உதயணன் கேள்வியையுடைய உதயணன் எனத் தனித்தனி கூட்டுக. நலமிகுதற்குக்
காரணமான புதல்வன் என்க. உகவை - உயர்ச்சி. வேந்தன் : பிரச்சோதனன். தூதன் உரைப்ப
என்க. |