பக்கம் எண் :

பக்கம் எண்:1033

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          தன்மைக் கேற்ற தலைப்பே ரணிகலம்
     10    புன்மை தீர முன்னிலை நல்கிப்
          பழன மணிந்த பதினா றாயிரம்
          கழனி நன்னகர் கலக்க மில்லன
          மன்ன னருளி மன்னரு மறவரும்
          இன்னே வருகென் றியமர மறைகென
     15    முரைசெறி முதியற்குப் பெறுவன நல்கி
          விரைசெல லிவுளி வேந்த னேவ
 
                   (இதுவுமது)
             9 - 16 : தன்மைக்........ஏவ
 
(பொழிப்புரை) அதுகேட்ட அம்மன்னவன் அச்செய்தி கொணர்ந்த தூதனுக்கு அச்செய்தியின் சிறப்பிற்கேற்ற பரிசிலாகவும் அவனது நல்குரவு துவர நீங்கவும் தானே தலைசிறந்த பேரணிகலத்தை வழங்கிப் பழனங்களாலே அழகு செய்யப்பட்ட பதினாறாயிரம் காணிகளாகிய கழனிகளையுடையதும் கலக்கமற்ற குடிகளையுடையதுமாகிய தன் தலைநகராகிய அவ்வுஞ்சையின்கண் அவ்வோகைச் செய்தியை அனைவர்க்கும் அறிவித்துக் குறுநில மன்னரும் மறவர்களும் இப்பொழுதே நம்முன் வருக! என்று கூறி இயமரம் அறைக! என்று தன் முரசறை வள்ளுவ முதியோனுக்குக் கட்டளையிட்டு அவ்வள்ளுவர் பரிசிலாகப் பெறத்தகுந்த பொருள்களையும் வழங்கி விரைந்து செல்லும் செலவினையுடைய குதிரையையுடைய அவ்வேந்தன் ஏவாநிற்றலாலே என்க.
 
(விளக்கம்) தன்மை - கொணர்ந்த செய்தியின் சிறப்பு. அணிகலன்களுட்சிறந்த அணிகலன் என்க. பதினாறாயிரம் காணியாகிய கழனி என்க. பழனம் - பொதுநிலம். கலக்கமில்லனவாகிய குடிகள் என்க. பதினாறாயிரம் - நகரங்களை (அருளி) என்னல் பொருந்தாமை யுணர்க. இயமரம் - ஒருவகை முரசம். முரைசு - முரசம். இவுளி - குதிரை.