| உரை |
| |
| 5. நரவாண காண்டம் |
| |
| 7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
| |
புனைபொற்
பூந்தார்ப் புரவலன் காக்கும்
கன்னி மூதெயி னன்னகர்
கேட்ப மதிமரு
ணெடுங்குடை மறமாச் சேனற்குப்
பதினா றாயிரம் பட்ட மகளிருள்
30 முதற்பெருந் தேவி திருநா
ளீன்ற மதுக்கமழ்
கோதை வாசவ தத்தை
வடதிசை மீனிற் கற்புமீக்
கூரி வடுவில்
செய்தொழில் வத்தவர்
பெருமகன் குறிப்பறிந்
தொழுகிக் கோடாக் குணத்தொடு 35
பொறிப்பூண் மார்பிற் புதல்வற் பயந்தனள்
|
| |
(இதுவுமது)
26 - 35 : புனைபொற்...........பயந்தனள்
|
| |
| (பொழிப்புரை) பொற்பூவால்
புனைந்த மாலையினையுடைய பிரச்சோதன மன்னனாற் காக்கப்படும் அழியாத் தன்மையையுடைய
பழைய மதில்களையுடைய நல்ல அவ்வுஞ்சைமா நகரத்து மாந்தர் அனைவருங் கேட்கும்படி,
'நகரத்தீரே! திங்கள் மண்டிலம் போன்ற நெடிய கொற்ற வெண்குடையையுடைய நம்மரசனாகிய
மறமாச்சேனனுடைய பட்டத்தேவியர் பதினாறாயிரவருள் வைத்து முதற் பெருந்தேவியார்
திருவுடைய நாளிலே ஈன்றருளிய தேன் மணங்கமழும் மலர்மாலையினையுடைய வாசவதத்தையார்
வடமீன் போலக் கற்புடைமையிலே மிகுந்து வசையற்ற ஆள்வினையையுடைய வத்தவ மன்னனாகிய
உதயணமன்னனுடைய குறிப்பறிந்து ஒழுகிப் பிறழாத நற்குணத்தோடே நல்லிலக்கணம் அமைந்த
அணிகலன்களையுடைய மார்பினையுடைய மகனை ஈன்றனர்' என்க.
|
| |
| (விளக்கம்) புரவலன் : பிரச்சோதனன். கன்னி
எயில் - அழிவின்மையையுடைய மதில். நகர் : ஆகுபெயர். மதிமருள்குடை, நெடுங்குடை என
இயைக்க. பட்டமகளிருள் என்றது வாளா தேவியர் என்னும் அளவில் நின்றது. திருநாள் -
திருவுடைமைக்குக் காரணமான நாள். மது - தேன். வடதிசைமீன் - அருந்ததி. மீக்கூரி -
மிக்கு. பொறி - நல்லிலக்கணக்
கோடுகள்.
|