பக்கம் எண் :

பக்கம் எண்:1036

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          கோமகற் பெற்று...........................
          சேய்முதல் வந்த சிறப்பின ராகி
           ..............................யக்கடம் பூண்டபின்
          வருபரி சார மணிநீர்ப் பேரியாற்
    40    றிருகரை மருங்கினு மிந்நில மேத்தச்
          சீர்மையொடு பொருந்திச் சிறப்பு முந்துறீஇ
          அறிவி னமர்வார் நெறிமையிற் றிரியா
          இருபான் மாக்களு மொருபாற் றிருந்த
          ஊர்திரை நெடுங்கட லுலப்பி னாளொடு
    45    வாழ்கநங் கோமான் வையக மெல்லாம்
 
                    (இதுவுமது)
            36 - 45 : கோமகற்...........வாழ்க
 
(பொழிப்புரை) ''அவ்வாசவதத்தையார் இறைமகனை ஈன்று ..................நெடுங்காலமாகத் தொடர்ந்து வந்த பெருமையினையுடையராய்..............அந்தக் கடமையை மேற்கொண்ட பின்னர் எப்பொழுதும் நீர்வாரா நின்ற 'பரிசாரம்' என்னும் தெளிந்த நீரையுடைய பேரியாற்றினது இரண்டு கரைப் பக்கங்களினும் இவ்வுலகம் புகழும்படி சீர்த்தியோடு கூடி அம்மகப்பேற்றின் பொருட்டுப் பலவேறு வகைச் சிறப்புக்களையும் செய்து நல்லறிவோடு அவ்வியாற்றின் கரையில் இறைநெறியில் பிறழாது இரண்டு பக்கத்தும் அமர்வாராகிய மாந்தர் எல்லாம் அலைவீசுகின்ற நெடிய கடலாற் சூழப்பட்ட இந்நில உலகத்தின்கண் முடிவற்ற வாழ்நாளோடு அறத்தினது பகுதியிலே நின்று தம் உயிர் திருந்துமாறு வாழ்க!'' என்க.
 
(விளக்கம்) கோமகன் : நரவாணதத்தன். சேய் முதல் - நெடுங்காலமாக. கடம் - கடமை. பரிசாரம் - அவந்தி நாட்டிற்கும் வத்தவ நாட்டிற்கும் இடையே ஓடும் ஒரு பேரியாறு. இப்பகுதியில் 36 ஆம் அடியில் இறுதிச்சீர் இரண்டும், 38 ஆம் அடியில் முதற்சீரிரண்டும் அழிந்தொழிந்தன பரிசாரம் வத்தவ நாட்டிற்கும் அவந்தி நாட்டிற்கும் பொதுவான ஆறாகலின் இவ்விரு நாட்டிற்கும் பொதுவுரிமையுடைய நரவாணதத்தன் பிறப்பினைக் கருதி அந்த யாற்றின் இரண்டு கரைகளிலும் மாந்தர் குழுமி இருந்து ஆயுட்டானம் முதலியவற்றை வழங்கி அம்மகவினை வாழ்த்துமின். அங்ஙனம் வாழ்த்துவீர் நீடுவாழ்க என்பது இப்பகுதியின் கருத்தென்க சீர்மை - மிக்க புகழ். சிறப்பு - ஆயுட்டான முதலிய சிறந்த செயல்கள். அறிவு - ஈண்டு நன்றியறிவின்மேல் நின்றது. ஊர்திரை : வினைத்தொகை. கடல் சூழ்ந்த உலகம் என்க.