உரை |
|
5. நரவாண காண்டம் |
|
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது |
|
50
..................யொண்புக ழுவந்தன
ரேத்தி வரைநிரைத்
தன்ன மாடந் தோறும்
திரைநிரைத் தன்ன படாகையுங்
கொடியும் காட்சிக்
காகா மாட்சிய வாகி
அணிபெற வுயரிப் பணிவிலர் மறல
55 இந்திர வுலக மிழுக்குபு
வீழ்ந்து வந்திருந்
தன்றெனக் கண்டவ ரேத்த
வேனல வேந்தன் விழுப்பெருங்
கோயிலுட் பன்னா
றாயிரம் பண்முர சார்ப்ப |
|
(நகரை
அணி செய்தல்)
50 - 58 :
ஒண்புகழ்...........ஆர்ப்ப |
|
(பொழிப்புரை) (அந்
நற்செய்தி கேட்ட அந்நகர்வாழ் குடி மக்கள்)............மன்னனுடைய ஒள்ளிய புகழை
மனமுவந்து பாராட்டித் தம்முடைய, மலைகளை நிரல்பட வைத்தாற்போன்ற மாட மாளிகைதோறும்
அலைகளை நிரல்பட நிறுத்தி வைத்தாற்போன்ற பெருங் கொடிகளையும் சிறு கொடிகளையும் கண்டு
கண்டு அமையாத மாட்சியுடையனவாய் அழகுண்டாக உயர்த்துதலாலே பகைவர் தாக்குதலாலே
இந்திரனுடைய மேனிலையுலகம் அச்சமெய்தி வானத்தினின்றும் நழுவி நிலத்தின்மேல் வந்து
வீழ்ந்து கிடந்தது என்று கண்டோர் பாராட்டாநிற்ப, வேற்படையின் நன்மையையுடைய
பிரச்சோதன மன்னனது சிறந்த பெரிய கோயிலின்கண் பதினாறாயிரம் பண்ணமைந்த
முரசங்கள் ஒருசேர ஆரவாரியாநிற்ப என்க. |
|
(விளக்கம்) இப்பகுதியில் 50ஆம் அடியின்
முதற்சீர் அழிந்தது. திரை - அலை. படாகை - பெருங்கொடி. காட்சிக்காகா -
காண்டற்கரிய. உயரி - உயர்த்த என்க. பணிவிலர் - பகைவர். இழுக்குபு - இழுக்கி.
வந்திருந்தன்று - வந்திருந்தது. வேல்நலம் - வேலாலாகிய நலம். அது வெற்றி என்க.
கோயில் - அரண்மனை. பன்னாறாயிரம் -
பதினாறாயிரம். |