பக்கம் எண் :

பக்கம் எண்:104

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
         
     15    வெறுக்கைச் செல்வம் வீசுத லாற்றாது
           மறுத்துக் கண்கவிழ்ந்த மன்னர் போல
           வாச மடக்கிய வாவிப் பன்மலர்
           மாசி லொள்ளொளி மணிக்கண் புதைப்பப்
 
                   (இதுவுமது)
            15 -18; வெறுக்கை......புதைப்ப
 
(பொழிப்புரை) பொன்னாகிய தம் பொருளை இரவலர் ஏற்ற
  பொழுது அள்ளி அள்ளி வழங்குதல் செய்யாது இல்லை
  யென்று மறுத்துக் கூறிக் கீழ் நோக்கிய வச்சை மன்னர்போன்று
  நீர் நிலையிலுள்ளனவாகிய மணத்தைத் தம்முள் அடக்கிய
  பலவாகிய தாமரை மலர்கள் தந்தேனை வண்டுகட்கு வழங்க
  மறுத்துக் குற்றமற்ற பேரொளியையுடைய மணிகள் அமைந்த
  பொகுட்டைஇதழான் மறைத்துக் கொண்டு குவியாநிற்ப என்க.
 
(விளக்கம்) வெறுக்கை - பொன். வீசுதலாற்றாது ; ஒரு
  சொல்; வழங்காமல் என்க. கண்கவிழ்தலாவது இரவலர் முகத்தை
  நோக்கவும் நாணி நிலத்தை நோக்குதல் வாவிப் பன்மலர் என்றது
  சிறப்பினால் தாமரை மலர் என்பதுபட நின்றது. மணி - தாமரைக்
  கொட்டை. மணிக்கண் என்றது கொட்டையமைந்த இடமாயகி
  பொகுட்டை அழகிய கண் எனவும் ஒரு பொருள் தோன்றிற்று.
  மறுத்து என்றதனால் இரவலர்க்கு என்றும் வண்டுகட்கு வழங்க
  மறுத்தென்றும் கூறிக்கொள்க.