பக்கம் எண் :

பக்கம் எண்:1040

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
         
    65    கீகென வருளி யெண்டிசை மருங்கினும்
          ஆய்படை வேந்தற் கரும்பெறற் றிருமகள்
          வாசவ தத்தை தீதில் சிறப்பொடு
          புத்திரற் பெற்றனள் பொலிவு முந்துறீஇ
          மொய்த்த மாநகர் முறைமுறை வருகென
    70    அதர்கடி தோடுறு மமைதி யாளரைப்
          பொறியொற் றோலையொ டறியப் போக்கி
 
                     (இதுவுமது)
             65 - 71 : எண்டிசை............போக்கி
 
(பொழிப்புரை) பின்னர் எட்டுத் திசைகளிடத்தும் உள்ள ஆராய்ந்தெடுத்த படையினையுடைய பிரச்சோதன மன்னனுக்கு அரும்பெறல் திருமகளாகிய வாசவதத்தை குற்றமற்ற சிறப்போடு ஆண்மகவினை ஈன்றனள். ஆதலின் அணி செய்யப்பட்டுச் சுற்றத்தார் வந்து மொய்த்த சிறந்த உஞ்சை நகரத்திற்கு எல்லீரும் அவரவர் மரபிற்கேற்ப வருவீராக'' என்று வரைந்து இலச்சினையும் இடப்பட்ட திருமந்திர ஓலையுடனே வழியில் விரைந்து ஓடும் இயல்புடைய தூதர்களை ஏனையோர் அறியும்படி செலுத்தி என்க.
 
(விளக்கம்) எண்டிசை மருங்கினும் அமைதியாளரை ஓலையொடு போக்கி என்க. ஆய் படை : வினைத்தொகை. அதர் - வழி. அமைதியாளர் - ஈண்டுத் தூதுவர். பொறி - இலச்சினை.