பக்கம் எண் :

பக்கம் எண்:1043

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          பாற்பட் டெய்திய பதினா றாயிரம்
          தூப்பா லமைச்சர் மேற்பா லறிவிற்
          றலைக்கை யாகிய நலத்தகு நாட்டத்து
          ஞாலம் புகழுஞ் சாலங் காயன்
    85    ஏற்ற சிறப்பி னியூகி தன்னொடு
          மாற்றங் கொடுத்தல் வலித்தன னாகி
 
        (யூகியும் சாலங்காயனும் சொற்போர் நிகழ்த்துதல்)
                81 - 86 : பாற்பட்............ஆகி
 
(பொழிப்புரை) பிரச்சோதனனுடைய அரசியலுறுப்புக்களின் பாற்பட்டு ஆங்கெய்திய தூய நெறியின்பால் ஒழுகும் பதினாறாயிரம் அமைச்சர்களுள் வைத்து மேம்பட்ட அறிவுடைமை காரணமாக முதலிடம் பெற்றவனும் நன்மை தக்கிருக்கின்ற நோக்கத்தையுடையவனும் சான்றோராற் புகழப்படுபவனும் ஆகிய ''சாலங்காயன்'' என்னும் அமைச்சன் தனக்குத் தகுந்த சிறப்பினையுடைய அந்த யூகி என்னும் அமைச்சனோடு சொற்போர் ஆற்றத் துணிந்தவனாய் என்க.
 
(விளக்கம்) பால் - பகுதி. தூப்பால் - தூய தன்மை. மேற்பாலறிவு - மேம்பட்ட அறிவு. தலைக்கை - முதலிடம். நாட்டம் - நோக்கம். ஞாலம் : ஆகுபெயர். சான்றோர் - என்க. மாற்றங் கொடுத்தல் - சொல்லாடுதல். வலித்தனன் - துணிந்தனன்.