பக்கம் எண் :

பக்கம் எண்:1044

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          முதல்வன் செவ்வி முகமுத னோக்கிச்
          சிதைபொரு ளின்றிச் செந்நெறி தழீஇ
          உதையத் திவரு மொண்சுடர் போல
    90    எல்லா மாந்தர்க்கு மிருளற விளங்கும்
          செல்லா றிதுவெனச் சொல்லுதல் வேண்டிச்
 
                   (இதுவுமது)
           87 - 91 : முதல்வன்............வேண்டி
 
(பொழிப்புரை) மன்னனுடைய செவ்வியுடைய முகத்தை நோக்கிப் பொய்ப் பொருளில்லாமல் செவ்விய நூல் நெறியைத் தழுவி வைகறையில் தோன்றும் ஒள்ளிய சுடரையுடைய ஞாயிற்று மண்டிலம்போலே எல்லா மாந்தர்களுக்கும் இருளின்றி விளங்குகின்ற செந்நெறி இஃது என்று சொல்லுதலை விரும்பி என்க.
 
(விளக்கம்) முதல்வன் : மன்னன். செவ்வி முகம் - தான் கூறுவதனைக் கேட்டற்கு அமைந்திருக்கின்ற முகம். முதல் : ஏழனுருபு : இரண்டாவதன்கண் மயங்கிற்று. சிதைபொருள் - பொய்ப்பொருள். செந்நெறி - செவ்விய நூல் நெறி. உதையம் - உதயம், ஒண்சுடர் - ஞாயிறு. ஞாயிறு பொருள்களை விளங்குதல் போன்று விளக்கி ஆறு காட்ட என்க.