பக்கம் எண் :

பக்கம் எண்:1046

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          மெய்த்தகு நுண்பொருண் மெத்தப் பன்னி
    100    உத்தர வாக்கியம் யூகியு நிறீஇக்
          கழிபே ருவகையொடு காவல் வேந்தன்
          ஒழிக நாமிவற் காற்றே முரையெனச்
          சாலங் காயனைத் தோல்வினை யேற்றி
          உரைத்த கிளவிக் கொன்றே போல
    105    விரித்துப்பல குற்றம் விளங்கக் காட்ட
 
                    (இதுவுமது)
            99 - 105 : மெய்த்தகு............காட்ட
 
(பொழிப்புரை) >மெய்யாந் தகுதியையுடைய நுண்பொருள்களை அந்த யூகி தானும் மிகவும் ஆராய்ந்து அவற்றிற்கு விடையாம் மொழிகளைக் கூறித் தன் கொள்கையை நிலைநிறுத்தாநிற்ப, அதுகேட்ட காவற்றொழிலையுடைய மன்னவன் மிகமிக மகிழ்ந்தவனாய்ச் சாலங்காயனை நோக்கி யாம் இவனோடு சொற்போராற்றுதலை ஒழிவோமாக. யாம் இந்த யூகிக்கு எதிர்மொழிய ஆற்றேங்காண் என்று கூறா நிற்ப, மேலும் யூகி அச் சாலங்காயனுக்குத் தோல்வியை ஏற்றி அவன் கூறிய மொழிகளுக்கு ஒருமொழி போலவே விரித்துப் பற்பல குற்றங்களைக் கூறி அவ்வவையோர்க்கு விளங்கக் காட்டுதலாலே என்க.
 
(விளக்கம்) மெத்த - மிகவும். பன்னி - ஆராய்ந்து. உத்தரவாக்கியம் - விடைமொழி. நிறீஇ - நிறுத்த. கழி : உரிச்சொல்; மிகுதி. வேந்தன் : பிரச்சோதனன். ஒற்றுமை நயத்தால் நீ ஒழிக என்னாது நாம் ஒழிகம் என்றான். இஃது சாலங்காயன் தோல்வியைத் தன் தோல்வியாக மேற்கொண்டபடியாம் என்க. தோல்வினை - தோல்வியினை. தோல்வு - தோல்வி. சாலங்காயன் உரைத்த கிளவிக்கு என்க