பக்கம் எண் :

பக்கம் எண்:1048

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          மன்னிசை நிறீஇய நன்ன ராளனொடு
          நுண்ணெறி நுழையு நூற்பொரு ளொப்புமைத்
    115    தன்வயின் மக்களை யவன்வயிற் காட்டி
          வேண்டற் பால வெறுக்கை நாடி
          வேண்டா ரட்டோன் வேண்டா னாயினும்
          அற்பிற் பிணித்த வருண்மறுப் பரிதா
          நற்பல கொடுத்து நம்பி பிறந்த
 
         (பிரச்சோதனன் யூகிக்குச் சிறப்புச் செய்தல்)
             113 - 119 : மன்னிசை.........கொடுத்து
 
(பொழிப்புரை) நிலைபெற்ற புகழை நிறுத்திய நன்மையையுடைய அந்த யூகியோடே நுண்ணிய நெறிகளினும் நுழைந்து காணும் நூற்பொருள் உணர்ச்சியால் ஒப்புடைய தன்னுடைய மக்களை அழைத்து அந்த யூகிக்குக் காட்டிக் கேண்மை கொள்வித்துப் பகைவரை வென்ற அந்த யூகி விரும்பானாயினும் அவனுக்கு வேண்டுவனவாகிய பொருள்கள் இவை என்று தானே ஆராய்ந்து கண்டு அன்பாற் பிணிக்கப்பட்ட அருளுடைமை காரணமாக அவன் வேண்டாவென மறுத்தல் அரிதாம்படி நல்ல பல பொருள்களை வழங்கி என்க.
 
(விளக்கம்) மன்னிசை - நிலைபெறும் புகழ். நன்னராளன் : யூகி. யூகியும் பிரச்சோதனனும் நூற்பொருளுணர்ச்சியில் ஒப்புமை யுடையோர் என்பது கருத்து. தன்வயின் மக்கள் - தன் மக்கள், யூகி பொருளை விரும்பானாயினும் தனது அன்பு காரணமாக அவன் மறுக்க வியலாதபடி செய்து வழங்கி என்க. வெறுக்கை - பொருள். வேண்டார் - பகைவர். அற்பின் - அன்பினால். நற்பல - நல்லனபல.