பக்கம் எண் :

பக்கம் எண்:105

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
           பெருமை பீடற நாடித் தெருமந்
    20     தொக்க லுறுதுய ரோப்புத லுள்ளிப்
           பக்கந் தீர்ந்த பரிசில ருந்தவாச்
           செறுமுகச் செல்வரிற் சேராது போகி
           உறுபொரு ளுள்ள துவப்ப வீசி
           வெறுவது விடாஅ விழுத்தகு நெஞ்சத்
    25     துரத்தகை யாளர் சுரத்துமுற் சீறூர்
           எல்லுறு பொழுதிற் செல்ல லோம்பி
           மகிழ்பத மயின்றிசி னாங்கு மல்லிகை
 
                     (இதுவுமது)
            19 - 27 ; பெருமை.........அயின்றிசினாங்கு
 
(பொழிப்புரை) கைப்பொருள் அற்றுப்போன இரவலர் தமது
  பெருமையும் பீடும் அறும்படி நல்குரவான் நலிந்து மனஞ்சுழன்று
  அது தீர்க்கும் வழியை ஆராய்ந்து தமது சுற்றத்தார் எய்துகின்ற
  துன்பத்தை அகற்ற எண்ணி எண்ணிப் புரவலர்பால் தம்மைச்
  செலுத்தாநின்ற அவாவினாலே புறப்பட்டுச் சினமுடைய முகத்தை
  யுடைய தீய செல்வர் இல்லங்களைச் சேராமல் ஒதுக்கித் தம்பால்
  உள்ள மிக்க பொருளை இரவலர் மனமுவக்கும்படி வழங்கி அவரை
  வாளா விடாத சிறப்புடைய நன்னர் நெஞ்சத்தையுடைய நல்லறிவாளர்
  வாழும் சிறிய ஊர் கொடிய பாலை நிலத்தின் கண்ணதாயினும்
  மடியின்றி ஞாயிறு வீழும் மாலைப் பொழுதிலே சென்று தமது வறுமைத்
  துயரத்தைப் பரிகரித்து அப்புரவலரோடு மனமகிழ்தற்குக் காரணமான
  உணவை உண்டு அவர் மனையில் இனிதே தம்வழி நடை வருத்தந்தீரத்
  துயின்றாற் போன்று என்க.
 
(விளக்கம்) நல்குரவான் தமது பெருமையும் பீடும் அற்றுப்போம்
  படி என்க. நாடுதல்-நல்குரவு தீர்தற்குரிய வழியை ஆராய்தல். ஒக்கல்
  - சுற்றத்தார். ஓப்புதல் - அகற்றுதல். பக்கம்-கைப்பொருள்; ஆகுபெயர்.
  கைப்பொருள் தீர்ந்துபோன பரிசிலர் என்க தெருமந்து - மனஞ்சுழன்று.
  உந்துகின்ற அவாவினால் என்க.செறுமுகச் செல்வர்-தம்பால் வருவாரைச்
  சினந்து அகற்றும் தீய செல்வர். செல்வரிற் சேராது எல்லுறுபொழுதிற்
  போகி என இயைக்க. எல்லுறுபொழுது -இரவு வரும்பொழுது. பாலைநிலம்
  ஆகலின் நண்பகலிற் செல்லாமல் மாலைப் பொழுதிலே சென்று என்றவாறு.
  இரவலர் மனமுவப்ப வீசி என்க. தம்முள்ளம் உவப்ப வீசி எனினுமாம்
  உரத்தகையாளர் - நல்லறிவாளர். செல்லல் - துன்பம். பின்னர்ப்
  பொருளுக்கு ஓதிய துயில் அமர்தலை ஈண்டு உவமத்திற்கும் கொள்க,
  மகிழ்தற்குக் காரணமான உணவு என்க.