பக்கம் எண் :

பக்கம் எண்:1051

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
         
    135    அங்கண் ஞாலத் தரசிய லமைதி
          எங்கட் கெல்லா மின்றி யுதயணன்
          தன்கட் டங்கிய தகைமை நாடின்
          நின்கண் மாண்பி னெடுமொழி யாள
          ஆயிற் றென்றுபல வருளொடும் புணர்ந்த
    140    யூகிக் குரையா வொருங்குட னிழற்றிப்
 
         (பிரச்சோதனன் யூகியைப் பாராட்டல்)
            135 - 140 : அங்கண்.........உரையா
 
(பொழிப்புரை) பின்னர் அந்த யூகியை நோக்கி, 'நெடிய புகழையுடையோய் ! அழகிய இடமமைந்த இந் நில உலகத்தின்கண் உயரிய அரசாட்சி முறைமை எம்மையுள்ளிட்ட அரசர்களிடத் தெல்லாம் நிறைவாக அமைதலின்றி உதயணனிடத்தில் மட்டும் அமைந்துள்ள தகுதிப் பாட்டினை ஆராயுமிடத்து அதற்குக் காரணம் நின்பாலமைந்த அமைச்சியல் மாண்பே ஆகும் என்று இன்னோரன்ன பற்பல அருளளாவிய முகமன் மொழிகளை யூகிக்குக் கூறி' என்க.
 
(விளக்கம்) எங்கட்கு - எம்மையுள்ளிட்ட பிற அரசர்களுக்கு. நெடுமொழி - புகழ். புணர்ந்த : பலவறிசொல். உரையா - உரைத்து.