பக்கம் எண் :

பக்கம் எண்:1055

உரை
 
5. நரவாண காண்டம்
 
7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது
 
          அருங்கலம் பிறவு மொருங்கு முந்துறீஇ
    160    வேந்துறை முதுநகர் வியன்மலை யாகப்
          போந்துகடன் மண்டும் புண்ணிய நீர்த்துறைப்
          பேரியா றென்ன வார்பெருஞ் செல்வமொடு
          நன்ப னாட்டகம் பின்பட நீந்தி
          வளங்கவி னெய்திய வத்தவ னிருந்த
    165    நலம்பெறு நகரம் புக்கன னினிதென்.
 
           (யூகி கோசம்பி நகரம் புகுதல்)
         159 - 165 : அருங்கலம்..............இனிதென்
 
(பொழிப்புரை) இவ்வாறு பிரச்சோதனனால் விடுக்கப்பட்ட யூகி அம் மன்னவன் தனக்கு வழங்கிய பேரணிகலங்களும் பிறவுமாகிய பரிசில்களை ஒருசேர முற்படச் செலுத்திப் பிரச்சோதன மன்னன் உறைகின்ற பழைய அவ்வுஞ்சை நகரமே அகன்ற மலையாகவும் தான் அம் மலையினின்றும் புறப்பட்டுச் சென்று கடல் புகுதற்கு மண்டுகின்ற புண்ணியந் தரும் நீர்த் துறையையுடைய பேரியாறாகவும் நிறைந்த பெருஞ் செல்வங்களோடே நல்லபல நாட்டிடங்கள் பிற்பட்டுக் கிடக்கும்படி சென்று எல்லா வளங்களாலும் அழகெய்திய வத்தவ நாட்டு மன்னன் அரசு வீற்றிருந்த அழகிய கோசம்பி நகரத்தின்கண் இனிது புகுந்தனன் என்க.
 
(விளக்கம்) வேந்து : பிரச்சோதனன். முதுநகர் - பழைய உஞ்சை நகரம். உஞ்சை நகரத்திற்கு மலைக் கூட்டம் உவமை. அவ்வுஞ்சை நகரத்தில் பெரும் பொருளைப் பரிசிலாகப் பெற்றுக்கொண்டு கோசம்பி நகரத்திற்குச் செல்லும் யூகிக்கு அம் மலையில் தோன்றி அம் மலையிடத்துள்ள பொருள்களை வாரிக்கொண்டு கடலிற் புகச் செல்லும் யாறு உவமை. கோசம்பி நகரத்திற்குக் கடல் உவமை. நகரம் - கோசம்பி நகரம். இனிது புக்கனன் என மாறுக.

          7. யூகி பிரச்சோதனனைக் கண்டு வந்தது முற்றிற்று.