உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
நாட்டு வாயுளுங் காட்டு
வாயுளும் கரத்த
லின்றிப் பரத்த னன்றெனத் 15
தாமுடை நாடு நகரமுந் தரீஇ
வாய்முறை வந்த வழக்கியல்
வழாமை ஏட்டுமிசை
யேற்றி யியல்பினின் யாப்புறுத்
தாற்றல் சான்ற வரும்பெறற்
சுற்றமொடு்
கூற்றமும் விழையக் கோலினி தோச்சிக்
|
|
(உதயணன்
செயல்)
13 - 19 : நாட்டு.......ஓச்சி
|
|
(பொழிப்புரை) அதுகேட்ட
உதயணன் இக்கேண்மைச் செய்திகளை நமது நாட்டினும் காட்டினும் வாழும் குடிமக்கள்
அனைவரிடத்தும் மறைத்தலின்றிப் பரப்புதல் நன்றென்று கருதித் தம்முடைய நாட்டுத்
தலைவரையும் நகரத் தலைவரையும் வரவழைத்து அச்செய்தி, வாயினால் கூறிய வழக்குத்
தவறாமல் இருக்க ஏட்டில் எழுதி இலச்சினை யிட்டு அவர்பால் ஈந்து விடுத்துப் பெறுதற்கரிய
ஆற்றல் நிரம்பிய அரசியற் சுற்றத்தாரோடு கூடிக் கூற்றுவனும் விரும்பும்படி முறைசெய்து
இனிதாகச் செங்கோலோச்சி என்க.
|
|
(விளக்கம்) நாட்டு வாயுளும் - நாட்டிடங்களிலும்.
காட்டுவாயுளும் - காட்டிடங்களிலும். நாடும் நகரமும் தரீஇ - நாட்டுத் தலைவரையும்
நகரத்தலைவரையும் வரவழைத்து. வழாமை - வழாமலிருக்க. நடு நிலையில் கூற்றம்
சிறந்தவனாதலின் உதயணன் நடுநிலைமை கண்டு கூற்றுவன் விழைந்தான் என்க. ''உரைவரை
நிறுத்தகோ லுயிர்திறம் பெயர்ப்பான்போல் முறை செய்தி'' (கலி. 100 : 15 - 6)
எனவும், ''தெரிகோன் ஞமன்ன்போல வொருதிறம் பற்ற லிலியரோ'' (புற.நா.6.9.10)
எனவும் வருதலுங்காண்க.
|