பக்கம் எண் :

பக்கம் எண்:1059

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
         
    20    கோட்ட மின்றிக் குடிபுறங் காத்து
          வாட்டொழிற் றானை வத்தவர் பெருமகன்
          அன்புடைத் தோழரோ டின்புற் றொழுகச்
          சிறந்த திருவொடு செல்வம் பெருகப்
          பிறந்த நம்பி திறங்கிளந் துரைப்பேன்
 
                   (இதுவுமது)
           20 - 24 : கோட்டம்.........உரைப்பேன்
 
(பொழிப்புரை) கோல் வளைதலின்றி அவ் வத்தவ மன்னன் தன் குடிமக்களைப் பாதுகாத்து வாள் முதலிய படைக்கலத் தொழிலின் மிக்க படைகளோடும் அன்புடைய தோழரோடும் இன்புற்று ஒழுகுதலாலே சிறந்த அழகோடு செல்வம் பெருகா நிற்ப, இனி யான் அம்மன்னனுக்குப் பிறந்த மகனாகிய நரவாணதத்தன் என்னும் அந்த நம்பியின் வரலாற்றை விதந்து கூறுவேன் கேண்மின் என்க.
 
(விளக்கம்) கோட்டம் - வளைவு. பெருமகன் : உதயணன். தோழர் யூகி முதலியோர். திரு - அழகு. நம்பி : நரவாணன். உரைப்பேன் என்பது நூலாசிரியர் கூற்று. இது நுதலிப் புகுதல் என்னும் உத்தி.