உரை |
|
3. மகத காண்டம் |
|
7. கண்ணுறு கலக்கம் |
|
மகிழ்பத
மயின்றிசி னாங்கு மல்லிகை
அவிழ்தா தூதி யளிதுயி லமரக்
கழனி யாரல் கவுளகத்
தடக்கிப் 30 பழன மருதிற்
பார்ப்புவாய் சொரிந்து
கருங்கா னாரை நரன்றுவந் திறுப்பத்
|
|
(இதுவுமது)
27 - 31 : மல்லிகை............இறுப்ப
|
|
(பொழிப்புரை) வண்டுகள்
குவிந்த நீர்ப்பூக்களை விரும்பிக் குளங்களிலே செல்லாமல் முல்லைப்
பரப்பிலே சென்று ஆங்குத் தம்மை வரவேற்று இன்முகங்காட்டி மலரும்
மல்லிகையை எய்தி அம்மல்லிகை கசிந்து வழங்கும் தேனை வயிறாரப் பருகி
அம் மலரிலேயே இனிய துயிலிற் பொருந்தா நிற்பவும், கரிய காலை
யுடைய நாரைகள் கழனிகளிலே ஆரல் மீனைப்பற்றித் தங்கவுளிலே
அடக்கிக்கொண்டு சென்று ஊர்ப் பொது நிலத்திலே நிற்கின்ற மருத மரத்திற்
குடம்பையிலுறைகின்ற தம் குஞ்சுகளின் வாயிலே, அவ்வாரல் மீனைச்
சொரிந்தூட்டி மகிழ்ச்சியாலே ஆரவாரித்துத் தங்காநிற்பவும்
என்க.
|
|
(விளக்கம்) செறுமுகச்
செல்வரிற் சேராது என்று உவமையிற் கூறியதற்கேற்ப ஈண்டும் குவிந்த
நீர்ப்பூக்களின்பாற் போகாமல் என்க அளி - வண்டு. ஆரல் - ஒருவகை மீன்.
பழனம் - ஊர்ப் பொது நிலம். மருது - மருதமரம். பார்ப்பு - குஞ்சு. உவந்து
நரன்று இறுப்ப என்க. நரன்று - ஆரவாரித்து. இறுப்ப - தங்க.
|