பக்கம் எண் :

பக்கம் எண்:1060

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
         
    25    குலக்குவிளக் காகத் தோன்றிக் கோலமொடு
          நலத்தகு சிறப்பி னல்லோர் நாப்பண்
          இலக்கணம் பொறித்த வனப்புடை யாக்கையன்
          விசும்பிற் கவாவும் வேட்கைய னாகிப்
          பசும்பொற் பல்படை யிலங்குங் கழுத்தினன்
    30    திருவா ணாய தேங்கமழ் மார்பன்
          நரவாண தத்த னாடொறு நந்தி
 
          (நரவாணதத்தனுடைய இளமைப் பருவம்)
                25 - 31 : குலக்கு.........நந்தி
 
(பொழிப்புரை) இனி, குருகுலத்திற்கு விளக்காகத் தோன்றி அழகோடு நலமெல்லாம் தக்கிருந்த சிறப்பினையுடைய நல்லோரிடையில் நல்லிலக்கணம் எல்லாம் அமையப் பெற்ற அழகுடைய யாக்கையையுடையனாய் வானுலகத்தை ஆளுதற்கு எழுகின்ற வேட்கையை யுடையவனாய்ப் பசிய பொன்னாலாகிய ஐம்படை விளங்குகின்ற கழுத்தையுடையவனாய்த் திருமகளுக்குப் புகலிடமாகிய தேன்மணக்கும் மார்பினையுடைய அந்த நரவாணதத்தன் நாள்தோறும் வளர்ச்சியுற்று என்க.
 
(விளக்கம்) குலக்கு - குலத்திற்கு. நல்லோர் - செவிலித்தாயர். வனப்பு - அழகு. பல்படை - ஐம்படை. திருவாண் - திரு ஆணம் : ஈறுகெட்டது. நந்தி - வளர்ச்சியுற்று.