பக்கம் எண் :

பக்கம் எண்:1062

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
          தளர்நடைக் காலத் திளமை யிகந்து
          நல்லா சாரமொடு நல்லோர் காட்ட
    40    நற்பொருண் ஞான நவின்றுதுறை போகி
          விற்பொரு ணன்னூல் விதியி னுனித்துப்
          படைக்கலக் கரணம் பல்வகை பயிற்றிக்
          கொடைக்கடம் பூண்ட கொள்கைய னாகிக்
 
                  (இதுவுமது)
             38 - 43 : தளர்............ஆகி
 
(பொழிப்புரை) தளர்ந்து நடக்கும் நடையினையுடைய காலத்ததாகிய குழவிப்பருவத்தைக் கடந்து கற்கும் பருவமெய்தி நல்ல ஆசிரியன்மார் நல்ல அற நூலையும் பொருள் நூலையும்கற்பித்தலாலே அவற்றைப் பயின்று முதிர்ந்து நல்ல வில் முதலிய படைக்கல நூல்களையும் முறைப்படி நுணுக்கமாகப் பயின்று அப்படைக்கலத் தொழில்களையும் பல்வேறு வகைகளாலும் பழகி அரசனுக்குரிய கொடைக் கடமைகளையும் மேற்கொண்ட கொள்கையையுடையவனாகி என்க.
 
(விளக்கம்) நல்லாசாரம் - அறநூல். நல்லோர் - நல்லாசிரியர். காட்ட - கற்பிக்க. நல்ல பொருள் நூலும் ஞான நூலும் என்க. நவின்று - பயின்று. கரணம் - தொழில் விகற்பம். கொடைக்கடம் - கொடையாகிய கடமை.

         'இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
         வகுத்தலும் வல்ல தரசு'    (குறள். 385)

என்பது பற்றி ஆசார நூல் பொருள் நூல் முதலியவற்றைப் பயின்று கொடைக் கடனும் பூண்டனன் என்றவாறு.