பக்கம் எண் :

பக்கம் எண்:1064

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
          நடவா நின்ற காலை மடனார்ந்
    50    தீற்று மந்தி யிற்றெழு பூங்கொடி
          புற்புல முதிரக நற்றுற விக்கே
          போல்வ ரென்னுஞ் சால்வுடை யொழுக்கிற்
          கலைதுறை போகிய கணிகா சாரத்துப்
          பலதுறை பயின்று பல்லுரைக் கேள்வியொடு
    55    படிவங் குறிக்கும் பாவனை மேற்கொண்
          டடிமையிற் பொலிந்த வகன்பரி யாளத்துத்
          தலைக்கோற் சிறப்பி னலத்தகு மகளிர்
          ஆயிரத் திரட்டி யைந்நூற் றுவர்களுட்
          காசில் சிறப்பிற் கலிங்க சேனையென்
    60    றோசை போகிய வொளியின ளாகிய
          மாசில் கற்பின் மடமொழி மடமகள்
 
              (கணிகையர் இயல்பு)
            49 - 61 ; மடன்............மடமகள்
 
(பொழிப்புரை) அறிஞர் 'கணிகை மகளிர், மடப்பமுடைய குட்டி ஈனும் பெண்குரங்கையும், முனைமுறிந்து தளிர்த்தெழுந்த பூங்கொடியினையும், புல்லையுடைய நிலத்தையும், மெய்யுணர்ச்சி முதிர்ந்தநெஞ்சினையுடைய நல்ல துறவியையும் நிகர்ப்பர்,' என்று கூறுதற்குப் பொருந்திய ஒழுக்கத்தினையும், மகளிர்க்குரிய கலைத்துறை பலவும் பயின்று முதிர்ந்த கணிகை மகளிர்க்குரிய ஒழுக்கத்தோடே பலதுறை நூல்களையும் பயின்று பல நூற் கேள்வியோடு விரதத்தைக் குறிக்கும் பாவனையையும் மேற்கொண்டு அடிமைத் தொழிலில் பொலிவுற்ற விரிந்த அரசன் பரிவாரங்களுள் வைத்துத் தலைக்கோல் என்னும் பட்டம் அரசனாற் சூட்டப்பட்ட அழகுத் தகுதிபெற்ற கணிகை மகளிர் இரண்டாயிரத்தைந்நூற்றுவருள் வைத்துக் குற்றமற்ற ''கலிங்க சேனை'' என்னும் பெயரினையுடைய தன் புகழை உலகெலாம் பரவச் செய்த குற்றமற்ற கற்பினையுடையவளும் மடப்பமுடைய மொழியினையுடையவளுமாகிய அக்கணிகையின் மகளும் என்க.
 
(விளக்கம்) ஈற்று மந்தி - ஈனுதலையுடைய பெண்குரங்கு. இற்று எழுபூங்கொடி - முனைமுறிந்து தளிர்த்தெழுந்த பூங்கொடி. புற்புலம் - புல்லையுடைய நிலம். முதிர் அகம் நல்துறவு - மெய்யுணர்ச்சி முதிர்ந்த நல்ல துறவி. அறிஞர் - மந்தி, பூங்கொடி. புற்புலம் நல்ல துறவி என்னும் இவற்றைக் கணிகை மகளிர் ஒழுக்கத்திற்கு உவமை கூறுவர். 'நொய்ம் பொரு ளானை நுகர்ந்திட்டு வான்பொரு, ணன்குடையானை நயந்தனர் கோடலின், வம்பிடை மென்முலை வாணெடுங் கண்ணவர், கொம்பிடை வாழுங் குரங்கும் புரைப,' (வளையாபதி) என்பதனால், வரைவின் மகளிர் குரங்கு போல்பவரென்பது விளங்கும்; கொடி முதலியவற்றிற்குரிய மேற்கோள்கள் வந்துழிக் காண்க. ஒரு கொழு கொம்பை விட்டு மற்றொன்றைப் பற்றுதல் கொடியின் இயல்பு; உள்ள புல்லைவிட்டுப் பயிரைக் கொள்ளல் புலத்தின் இயல்பு; பிறபொருள்கள் எல்லாவற்றிலும் பற்றொழிந்து பரம்பொரு ளொன்றையே நினைந்திருத்தல் துறவியின் இயல்பு; 1. 35 : 138 - 41; 'தாவரு மருவினை செற்றுத் தள்ளரு, மூவகைப் பகையரண் கடந்து முத்தியிற். போவது புரிபவர் மனமும் பொன்விலைப் பாவையர் மனமும்போற் பசையு மற்றதே' (கம்ப. தாடகைவதைப். 15). ஏற்றவாறு பொருட்குணம் விரித்துக் கொள்க. கலைதுறை போகிய கணிகாசாரம் - தமக்குரிய கலைகள் பலவற்றையும் பயின்று முதிர்ந்த ஒழுக்கம். கணிகை மகளிர் அறுபத்து நான்கு கலைகளையும் கற்றுங்கேட்டும் துறைபோதல் உண்டென்பதனை,

   'வேத்தியல் பொதுவிய லென்றிரு திறத்துக்
   கூத்தும் பாட்டுந் தூக்குந் துணிவும்
   பண்ணியாழ்க் கரணமும் பாடைப் பாடலுந்
   தண்ணுமைக் கருவியுந் தாழ்தீங் குழலுங்
   கந்துகக் கருத்து மடைநூற் செய்தியுஞ்
   சுந்தரச் சுண்ணமுந் தூநீ ராடலும்
   பாயற் பள்ளியும் பருவத் தொழுக்கமுங்
   காயக் கரணமுங் கண்ணிய துணர்தலுங்
   கட்டுரை வகையுங் கரந்துறை கணக்கும்
   வட்டிகைச் செய்தியு மலராய்ந்து தொடுத்தலுங்
   கோலங் கோடலுங் கோவையின் கோப்புங்
   காலக் கணிதமுங் கலைகளின் றுணிவு
   நாடக மகளிர்க்கு நன்கனம் வகுத்த
   வோவியச் செந்நூ லுரைநூற் கிடக்கையுங்
   கற்றுத்துறை போகிய பொற்றொடி நங்கை'
 எனவும்,      (மணிமேகலை. 2. 18 - 32)
   'யாழ்மு தலாக வறுபத் தொருநான்
   கேரிள மகளிர்க் கியற்கையென் றெண்ணிக்
   கலையுற வகுத்த காமக் கேள்வி' (பெருங். 1. 35 : 84 - 6)


எனவும், 'எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற......மடந்தையர்' (சிலப். 22 : 138 - 9) எனவும் வருவனவற்றாலும் உணர்க. படிவம் - விரதம். பாவனை - அபிநயம். பரியாளம் - பரிவாரம். தலைக்கோல் - இது நாடக மகளிர்க்கு அரசனால் வழங்கப்படும் ஒரு விருது.

   'பேரிசை மன்னர் பெயர்புறத் தெடுத்த
   சீரியல் வெண்குடைக் காம்புநனி கொண்டு
   கண்ணிடை நவமணி யொழுக்கி மண்ணிய
   நாவலம் பொலந்தகட் டிடைநிலம் போக்கிக்
   காவல் வெண்குடை மன்னவன் கோயில்
   இந்திர சிறுவன் சயந்த னாகென
   வந்தனை செய்து வழிபடு தலைக்கோல்,' (சிலப். 3 : 114 120)

என்பதனாலும் உணர்க. ஓசை - புகழ். ஒளி - நன்மதிப்பு. மடமொழி : அன்மொழித்தொகை. மடமொழியையுடைய அக்கலிங்கசேனை மடமகள் என்க.