உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
வானோ ருலகி னல்லது
மற்றவட் கீனோ
ருலகி னிணைதா னில்லெனக்
கண்டோ ராயினுங் கேட்டோ ராயினும்
65 தண்டாது புகழுந் தன்மைய
ளாகித் துதைபூங்
கோதை சுமத்த லாற்றா
மதர்மா னோக்கின் மாதரஞ்
சாயற் பதரில்
பணிமொழிப் பணைத்தோட் சின்னுதல்
மதர்வை நோக்கின் மதனமஞ் சிகைதன்
70 மலைபுரை மாடத் துயர்நிலை
மருங்கின் அணிச்சா
லேகத் தணித்தகு துளையூ
டெறிபந் திழுக்குபு விழுதலி னோக்கிச்
|
|
(மதனமஞ்சிகை பந்தாடுகையில்
பந்து கீழே விழுதல்)
62 - 72 :
வானோர்.........நோக்கி
|
|
(பொழிப்புரை) தேவருலகின்கண் ஒரோவழி இருந்தாலல்லது அவளுக்கு இவ்வுலகத்திலே இணையாவார் யாரும்
இல்லை என்று அவளைக் கண்டோரும் அவள் சிறப்பினைக் கேட்டோரும் அமையாது புகழ்தற்குக்
காரணமான பெண்மைத் தன்மையுடையளாய்த் தன் கூந்தலிலே செறிந்த மலர்மாலைகளையும்
பொறுக்கலாற்றா மென்மையுடையளாய் மானினது மதர்த்த நோக்கத்தையொத்த
நோக்கினையுடையளாய்க் கண்டோரைக் காமுறுத்தும் அழகிய மென்மையினையும் பதர்ச்சொல்
இல்லாத பணிவுடைய மொழியினையும் பருத்த தோளையும் சிறிய நுதலையும் மிளிர்தலுடைய
கண்களையும் உடையவளுமாகிய மதன மஞ்சிகை என்னும் நங்கை தன்னுடைய மலையையொத்த மேனிலை
மாடத்தின் உயர்ந்த உச்சியின்கண் எறிந்து ஆடும்பந்து தவறி அழகிய பலகணியினது துளையூடு
வந்து கீழே விழுதலால் அதனை நோக்கி என்க.
|
|
(விளக்கம்) மடமொழியாளாகிய கலிங்கசேனையின்
மகளும் தன்மையளும் சாயலையும் மொழியையும் தோளையும் நுதலையும் நோக்கையும் உடையவளும்
ஆகிய மதன மஞ்சிகை என்க. ஈனோருலகு - இவ்வுலகத்தோர். தண்டாது - அமையாமல். தன்மை -
பெண்தன்மை. மாதர் - காதல். சாயல் - மென்மை. பதர் - உள்ளீடற்றது. மலைபுரை -
மலையையொத்த. சாலேகம் - பலகணி. இழுக்குபு -
இழுக்கி.
|