பக்கம் எண் :

பக்கம் எண்:1066

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
          செறிவளைத் தோளி செம்முக மாக
          வேகத் தானை வேந்த னொருமகன்
    75    போகுகொடி வீதியிற் புகுந்துபல ரேத்த
          அருவரை மருங்கி னருவி போல
          இருகவுண் மருங்கினுஞ் சொரிதரு கடாத்ததோர்
          இடுமணி யானை யெருத்த மேறிப்
          படுமுகின் மீமிசைப் பனிமதி போல
    80    உலாவெனப் போந்தோ னிலாவுறழ் பூந்துகிற்
          றானைப் படுதலிற் றானே கொண்டிஃ
          திட்டோ ளார்கொலென் றெட்டி நோக்கினன்
 
            (நரவாணதத்தன் உலாவரல்)
            73 - 82 : செறி............நோக்கினன்
 
(பொழிப்புரை) செறிந்த வளையலையுடைய தோள்களையுடைய அம்மதனமஞ்சிகை அம்மாடத்தின்மேல் எதிர்முகமாக நின்றபொழுது சினமிக்க படைகளையுடைய உதயணமன்னனுடைய ஒரே மகனாகிய நரவாணதத்தன் உயர்ந்த கொடிகளையுடைய அந்த வீதியின்கண் தன்னைப் புகழ்ந்து பலரும் பாராட்டா நிற்ப, ஏறுதற்கரிய மலையுச்சியினின்றும் இருபக்கத்தும் வீழா நின்ற அருவிபோல இரண்டு கவுள்களினின்றும் வீழுகின்ற மதநீரையுடைய ஒரு மணி கட்டிய யானையினது பிடரின்கண் ஏறிப் பெரிய முகில் உச்சியில் தோன்றும் குளிர்ந்த திங்கள் மண்டிலம் போன்று உலாவுதற்கு எழுந்தருளியவனது நிலாவினை யொத்த வெள்ளிய தனது பூந்துகிலின் முன்றானையில் அப்பந்து வந்து வீழ்தலாலே அதனைத் தானே கைப்பற்றிக் கொண்டவனாய் இப்பந்தினை என்மேலிட்டவள் யார்? என்று அறிதற்பொருட்டு அண்ணாந்து மேலே நோக்கினனாக ! அங்ஙனம் நோக்குழி என்க.
 
(விளக்கம்) செம்முகம் - எதிர்முகம். வேந்தன் : உதயணன். போகு கொடி - உயர்ந்த கொடி. கடாத்தது - மதநீரையுடையது. எருத்தம் - பிடர். யானையின் பிடரில் அமர்ந்து உலாவரும் நரவாண தத்தனுக்கு முகில் உச்சியில் தோன்றும் திங்கள் மண்டிலம் உவமை. உலாவென - உலாவுதற்கு என. துகிற்றானை - துகிலின் முகப்பு. எட்டி - அண்ணாந்து.