பக்கம் எண் :

பக்கம் எண்:1067

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
          நிறைமதி வாண்முகத் துறழ்வன போல
          நீளரி யொழுகி நிகர்தமக் கில்லா
    85    வாள்புரை தடங்கண் வளைத்தவள் வாங்கி
          நெஞ்சகம் படுப்ப வெஞ்சின வீரன்
          அறியா மையின் மறுகுறு சிந்தையன்
          பந்துவலி யாகப் பையெனப் போகியோர்
          அந்தண் காவினு ளசைந்தன னிருந்து
 
        (நரவாணதத்தன் மதனமஞ்சிகையைக் கண்டு விரும்பல்)
                  83 - 89 : நிறை.........இருந்து
 
(பொழிப்புரை) கலைகள் நிறைந்த திங்கள்மண்டிலத்தை ஒத்த தனது ஒளிமுகத்தின்கண் ஒன்றனை ஒன்று எதிர்ப்பன போன்று அமைந்து நீண்ட செவ்வரி பரந்து தமக்கு ஒப்பில்லாத வாள்போன்ற தன் பெரிய கண்களாகிய வலையால் அம் மதனமஞ்சிகை அந்நரவாணதத்தனுடைய மனமாகிய மீனை வளைத்துப் பற்றி இழுத்துத் தனது நெஞ்சகமாகிய நீர்நிலையிலே அகப்படுத்துதலாலே வெவ்விய வெகுளியையுடைய அவ் வீரன் அந் நங்கையை இன்னாள் என்று அறியாமையினாலே சுழலுகின்ற சிந்தையையுடையவனாய் அவளெறிந்த அப் பந்தினையே தனக்குத் துணையாகக் கருதி அதனைக் கைக்கொண்டு மெல்லச்சென்று ஆங்கோர் அழகிய குளிர்ந்த சோலையினுள் இறங்கித் தங்கியிருந்து என்க.
 
(விளக்கம்) உறழ்வன - எதிர்வன. அரி - கோடு; செவ்வரி. கண்ணாகிய வளையால் வளைத்து என்க. வீரன் : நரவாணதத்தன். இன்னாளென்று அறியாமையால் என்க.