பக்கம் எண் :

பக்கம் எண்:1068

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
         
    90    கொய்ம்மலர்ப் படலைக் கோமுகற் கூஉய்க்
          கைபுனை வனப்பிற் கணிகையர் சேரியிற்
          செய்பந் தீதுடைச் சேயிழை மாதரை
          ஐய மின்றி யறிதி யாயின்
          மெய்பெற வுரையென மேயினன் வினவக்
 
          (நரவாணதத்தன் கோமுகனை வினாதல்)
               90 - 94 : கொய்.........வினவ
 
(பொழிப்புரை) கொய்த மலரோடு தளிர் விரவிப் புனைந்த படலைமாலையணிந்த கோமுகனையழைத்து, ''நண்பனே ! யாம் உலாவரும் வழியின்கண் உள்ள கணிகையர் சேரியின்கண் ஒப்பனை செய்யப்பட்ட அழகினையுடைய இப் பந்தினை உடைய நங்கையை நீ ஐயமின்றி அறிவாயாயின் யான் அவளை உணர்ந்து கொள்ளும்படி எனக்குக் கூறுவாயாக'' என்று பெரிதும் விரும்பியவனாய் வினவா நிற்றலாலே என்க.
 
(விளக்கம்) கொய்மலர் : வினைத்தொகை. படலை - மலரும் தளிரும் விரவிப்புனைந்த ஒருவகை மாலை. கோமுகன் - தோழருள் ஒருவன். கூஉய் - அழைத்து. செய்பந்து : வினைத்தொகை. சேயிழை மாதரை என்றது நங்கையை என்னும் அளவின் நின்றது. மேயினன் - விரும்பியவனாய்.