பக்கம் எண் :

பக்கம் எண்:1069

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
         
    95    கையிற் கொண்டோன் கண்டன னதன்மிசை
          ஒற்றிய வொற்றைத் தெற்றெனத் தெரிந்து
          நறுவெண் சாந்தம் பூசிய கையாற்
          செறிவுறப் பிடித்தலிற் செறிவிர னிரைவடுக்
          கிடந்தமை நோக்கி யுடங்குணர் வெய்தி
 
        (கோமுகன் மதனமஞ்சிகையின் உருவத்தை எழுதுதல்)
                 95 - 99 : கையிற்............எய்தி
 
(பொழிப்புரை) அதுகேட்ட கோமுகன் அவனிடத்தினின்றும் அப் பந்தினை வாங்கிக் கையிற்கொண்டவன் அதனைக் கூர்ந்து நோக்கி அதன்மேல் அழுந்தியுள்ள கைச்சுவட்டினைத் தெளிவாக ஆராய்ந்து அப்பந்து நறிய வெண்சந்தனம் பூசப்பட்ட கையினால் இறுகப் பிடிக்கப்பட்டமையால் அக் கையினது செறிந்த விரல்களின் நிரல்பட்ட வடுக்கள் அழுந்திக் கிடந்தமையை நன்கு நோக்கி அவ்வடுக்களைக்கொண்டே அப் பந்தினைப் பிடித்த நங்கையின் உருவ முழுவதையும் ஊகித்துணர்ந்துகொண்டு என்க.
 
(விளக்கம்) ஒற்றிய ஒற்று - ஒற்றப்பட்ட வடு. தெற்றென - விரைவாக எனினுமாம். தெரிந்து - ஆராய்ந்து. உடங்கு - ஒருசேர. அப் பந்தின் மேல் அழுந்தி இருந்த விரல் வடுக்களைக்கொண்டே அப்பெண்ணின் உருவம் இங்ஙனம் இருத்தல் வேண்டுமென்று ஊகித்துணர்ந்துகொண்டான் என்பது கருத்து.