பக்கம் எண் :

பக்கம் எண்:107

உரை
 
3. மகத காண்டம்
 
7. கண்ணுறு கலக்கம்
 
           துணைபிரி மகளி ரிணைமலர் நெடுங்கண்
           கட்டழன் முத்தங் காலப் பட்டுடைத்
           தனிக்கா ழல்குற் பனிப்பசப் பிவர
     35    அழல்புரை வெம்பனி யளைஇ வாடை
           உழல்புகொண் டறாஅ தொல்லென் றூர்தரச்
           செங்கேழ் வானக் கம்பலம் புதைஇ
           வெங்க ணீர தாகி வேலிற்
           புன்கண் மாலை போழத் தன்கட்
 
                  (இதுவுமது)
            32 - 39; துணை.........போழ
 
(பொழிப்புரை) வாடைக்காற்றுத் தீப்போலும் கொடிய பனியோடு
  கலந்து - தங்கணவரைப் பிரிந்துறையும் மகளிருடைய இணைந்த
  மலர்போன்ற நெடிய கண்கள் தீப்போன்று சுடுகின்ற துன்பக்
  கண்ணீரை முத்து முத்தாய் உகுப்பவும் பட்டாடையையும். ஒப்பற்ற
  மேகலையையுமுடைய அல்குலின்கண் நடுக்கஞ் செய்யும் பசலை
  நோய் படராநிற்பவும் சுழன்று வீசுதலைக்கொண்டு இடையறாமல்
  ஒல்லென்னும் ஓசையோடே பரவாநிற்பவும் துன்பத்தைத் தரும்
  மாலைக்காலமானது சிவந்த நிறமுடைய வானமாகிய கம்பலத்தைப்
  போர்த்து வந்து வெவ்விய கண்ணையுடையதாய்த் தன்னெஞ்சினை
  வேல்போன்று பிளவாநிற்பவும் என்க.
 
(விளக்கம்) துணை - கணவன்மார், இணைமலர்; வினைத்தொகை.
  கடு - அழல், கட்டழல். முத்தம் ; உவம வாகுபெயர்; கண்ணீர்த்துளி.
  தனிக்காழ் - ஒற்றை வடமுமாம். பனி - நடுக்கம், இவர - படர; வாடை
  காலவும் இவரவும், உழல்புகொண்டு ஊர்தர என்க. உழல்பு. உழலல்.;
  சுழலுதல். ஒல்லென்று - ஒலிக் குறிப்பு, கேழ்-நிறம். கம்பலம் - போர்வை.
  நீரது - தன்மையுடையது; மாலை வேல்போல நெஞ்சம் போழ என்க.