உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
பந்துகைக் கொண்டு மைந்தன்
போகிக் காழார்
வனமுலைக் கணிகையர் சேரித்
தோழ னுள்ளத் தாழ்நனி கலக்கிய
120 மாதர் மனைவயிற் றூதுவ
னாகிப் பல்காற்
சென்று மெல்லெனச் சேர்ந்து
குறிப்புடை வெந்நோய் நெறிப்பட
நாடிய பாசிழை
நன்கலம் பரிய
மாக மாசில்பந்
தறிவு படமேல் வைத்தாண் 125 டீன்ற
தாய்முதற் றோன்றக் காட்டிப் |
|
(கோமுகன்
மதனமஞ்சிகையின் வீட்டிற்குச்
சென்று பரிசங்
காட்டல்)
117 - 125 : பந்து............காட்டி |
|
(பொழிப்புரை) நரவாண
தத்தனுடைய விருப்பத்தின்படி கோமுகன் அப் பந்தினை எடுத்துக்கொண்டு சென்று முத்துவடம்
பொருந்திய அழகிய முலையினையுடைய கணிகையர் சேரியின்கண் தன் தோழனாகிய
நரவாணதத்தனுடைய உள்ளக்கோயிலின் நிறையாகிய தாழக்கோலை நன்கு முறித்த அழகியாகிய
அம் மதனமஞ்சிகையின் மாளிகையையடைந்து நரவாணதத்தனுக்குத் தூதுவனாய்ப் பலகாலும்
செவ்விபெறாமல் சென்று சென்று செவ்வி கிடைத்தபொழுது மெல்ல அவள் இல்லத்தே புகுந்து,
காமக் குறிப்புடைய வெவ்விய பிணி தீர்ந்து நன்னெறிப்படும்படி அந் நங்கையின்
நெஞ்சத்தை ஆராய்ந்தறியும் பொருட்டுப் பசிய மணிகள் வைத்திழைத்த நல்ல
அணிகலங்களைப் பரியப் பொருளாக ஒரு பொற்றாளத்தின்மேல் வைத்து அவற்றின்மேல்
குற்றமற்ற அப் பந்தினை அம் மதனமஞ்சிகைக்கு நரவாணதத்தனின் நினைவுண்டாதற்பொருட்டு
வைத்து அவ்விடத்தே அவளை ஈன்ற தாயாகிய கலிங்கசேனைக்கு அவற்றை நன்கு காட்டி
என்க. |
|
(விளக்கம்) மைந்தன் : கோமுகன். காழ் -
முத்துவடம். தோழன் : நரவாணதத்தன். தாழ் - தாழக்கோல். நரவாணதத்தனுக்குத் தூதுவனாய்
என்க. செவ்வி பெறாமையால் பல்காற்சென்று என்க. முன்பு மதனமஞ்சிகை பந்து
வீழ்த்தியபொழுது அப் பந்து நரவாணதத்தன் மேல் வீழ்ந்ததனைக் கண்டிருத்தலின் மீண்டும்
அப் பந்தினைக் காணுங்கால் அவன் நினைவு அவளுக்குத் தோன்றுதல் இயல்பாகலின் அந்நினைவு
தோன்றற்பொருட்டு அப்பந்தினை அப்பரியப் பொருளின்மேல் வைத்துக் காட்டினன் என்பது
கருத்து. அறிவு - ஈண்டு நினைவு. தாய் முதல் : உருபு
மயக்கம். |