உரை |
|
5. நரவாண காண்டம் |
|
8. மதனமஞ்சிகை வதுவை |
|
கற்கெழு கானவன் கைக்கோ
லுமிழ்ந்த 135 எற்படு சிறுதீ
யெழுச்சியிற் காமம்
மிகுமனத் துவகையி னொல்லை
விருப்பம் முறையின்
முறையின் முறுக மூட்டிக்
கொடித்தேர்க் கோமான் குறிப்பி
னல்லதை அடித்தியை
யருளுதல் யாப்பின் றெமக்கெனப் 140
படிற்றுரை மகளிர் பரிய மறுப்ப
|
|
(இதுவுமது)
134 - 140 : கற்கெழு............மறுப்ப
|
|
(பொழிப்புரை) இவ்வாறு அம்
மகளிர் தம் மொழிகளாலே மதனமஞ்சிகையின் பால் காமங்கொண்டு மிகாநின்ற
நரவாணதத்தனுடைய நெஞ்சின்கண் குறிஞ்சி நிலத்தில் வாழும் குறவன் கடைகின்ற
தீக்கடைகோல் தோற்றுவித்த ஒளியுடைய சிறிய தீ எழுந்து அக்காடு முழுதும் பற்றி
எரிதல்போன்று அக் காமமும் எழுந்து பெருகும்படியும் மகிழ்ச்சிக்குக் காரணமான
விருப்பத்தை யுண்டாக்கும்படியும் அவ்வெண்ணம் விரைந்து படிப்படியாக முதிரும்படியும்
மூள்வித்துப் பின்னர் வஞ்சக மொழிகளையுடைய அம் மகளிர் அக் கோமுகனை நோக்கிப்
பெருமானே ! கொடியுயர்த்த தேரையுடைய நம் அரசனாகிய உதயணகுமரன் அடியேங்களுக்குக்
கட்டளையிட்டாலன்றி நரவாணதத்தன் அடிச்சியாகிய மதனமஞ்சிகைக்கு அருள் செய்தல்
எமக்குப் பொருந்தாது என்று கூறி அப் பரியப் பொருளைக் கைக்கொள்ளாமல் மறுத்தலாலே
என்க.
|
|
(விளக்கம்) கல் - மலை. கானவன் - குறவன். கோல்
- தீக்கடை கோல். எழுச்சியின் - எழுதல்போல. தமது சொல்லால் நரவாணதத்தன் காமம்
மிகும்படி பேசிப் பின்னர்ப் பரியப்பொருளை மறுப்ப என்க. கோமான் : உதயணன்.
உதயணனுடைய உடம்பாடின்றி நரவாணதத்தன் மதனமஞ்சிகையை மணத்தல் எம்மனோர்க்குப்
பொருந்தாது என்று மறுத்தபடியாம்.
|