பக்கம் எண் :

பக்கம் எண்:1077

உரை
 
5. நரவாண காண்டம்
 
8. மதனமஞ்சிகை வதுவை
 
          உறாஅர் போல வுற்ற காதலொடு
          மறாஅர் மாதர் வதுவை வலித்தபின்
    155    மதிபுரை முகத்தியை மன்னவ னொருமகன்
          வதுவைச் செல்வமொடு வான்றோய் வியனகர்
          விதியி னெய்தி விழவு முந்துறீஇப்
          பதனறிந்து நுகருமாற் பண்புமிகச் செறிந்தென்.
 
                (நரவாணதத்தன் மணம்)
            153 - 158 : உறாஅர்............செறிந்தென்
 
(பொழிப்புரை) நொதுமலர்போலத் தன்னைக்காட்டி நிறைந்த காதலோடு உடன்படாதாள்போலப் பெரிதும் உடம்பட்ட மதனமஞ்சிகையினது திருமணத்தைக் கலிங்கசேனை முதலிய மகளிர் முடிவுசெய்த பின்னர்த் திங்கள்மண்டிலத்தை யொத்த முகத்தையுடைய அம்மதனமஞ்சிகையை உதயணமன்னனுடைய ஒரே மகனாகிய நரவாணதத்தன் திருமண விழாவின்பத்தோடே வானத்தைத் தீண்டாநின்ற அகன்ற அரண்மனையின்கண் மறை விதிப்படி திருமணம் புணர்ந்து விழாக்கள் பல செய்து செவ்வியறிந்து காதற்பண்பால் நிறைவுற்று நரவாணதத்தன் அம்மடந்தையோடு இன்பம் நுகர்வானாயினன் என்க.
 
(விளக்கம்) உறாஅர் போல - நொதுமலர்போலக் காட்டி மறுப்பாள் போல மறாத மாதர் என்க. மாதர் : மதனமஞ்சிகை. வலித்தபின் - துணிந்தபின். மகன் : நரவாணதத்தன். வதுவை - மணச்சடங்கு. விதி - மறை நூல்விதி. பதன் - செவ்வி. பண்பு - காதற் பண்பு.

  'செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கும்
   உறாஅர்போன் றுற்றார் குறிப்பு'  (குறள். 1097)

என்பது திருக்குறள்.

                 8. மதனமஞ்சிகை வதுவை முற்றிற்று.