பக்கம் எண் :

பக்கம் எண்:1079

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          பொன்றா வேட்கைப் புலங்களை நெருக்கி
          வென்றா ராயினும் விழையும் விழவணி
     10    காணும் வேட்கையொடு சேணுய ருலகிற்
          றேவ கணமும் மேவர விழிதர
          விறல்கெழு சிறப்பின் விச்சா தரரும்
          இறைகொண் டிழிதர விப்பாற் சேடியின்
 
                     (இதுவுமது)
            8 - 13 : பொன்றா..................சேடியின்
 
(பொழிப்புரை) இன்னும் அந்நகரத்தின்கண் நிகழும் அழியாத வேட்கையினையுடைய மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் தம் ஐம்பொறிகளும் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலன்களின்பால் செல்லவொண்ணாதபடி ஒடுக்கி அவற்றை வென்ற துறவிகளும் காண்டற்கு விரும்புதற்குக் காரணமான அத்திருவிழாவின் அழகினைக் காணுதற் கெழுந்த விருப்பத்தோடே மிகவும் உயர்ந்த வானுலகத்தில் வாழும் தேவர் கூட்டங்களும் விரும்புதலுண்டாகத் தம்முலகினின்றும் இறங்கி வாராநிற்பவும் வெற்றியுடைய சிறப்பினையுடைய விச்சாதரர்களும் அங்ஙனமே விழாக்காண விரும்பி இறங்கிவந்து தங்காநிற்பவும், இனி வெள்ளிமலையின் மேலுள்ள வித்தியாதரருலகின்கண் என்க.
 
(விளக்கம்) பொன்றா - அழியா : ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். பொறிகளைப் புலன்களிற் செல்லாதபடி அடக்கி வென்ற என்க. சேணுயருலகம் - மிக உயர்ந்த வானுலகம். மேவர - விருப்பமுண்டாக. விறல் - வெற்றி. இழிந்து இறைகொள்ள என்க. சேடி வெள்ளிமலையின் மேலுள்ள வித்தியாதரருலகு. நிலஉலகத்தில் நிகழும் திருவிழாவைக் காணத் தேவர்களும் வருதலுண்டென்பதனை, 'தீவகச்சாந்தி செய்தரு நன்னாள், ஆயிரங் கண்ணோன் றன்னோ டாங்குள, நால்வேறு தேவரு நலத்தகு சிறப்பிற், பால்வேறு தேவரு மிப்பதிப் படர்ந்து' (மணி. 1 : 35 - 8) என்பதனானும் உணர்க.