பக்கம் எண் :

பக்கம் எண்:1081

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          பத்திப் படாகையும் பல்பூங் கொடியும்
    20    சித்திரித் தெழுதிய வித்தக விமானமும்
          இருநிலத் தியங்கு மியந்திரப் பாவையும்
          அருவினை நுட்பத் தியவனப் புணர்ப்பும்
          பொத்தகை யானையும் பொங்குமயிர்ப் புரவியும்
          சித்திர மாலையு மக்கடந் தொட்டிலும்
    25    வெண்டா ரொழுக்கும் விளக்குறு பூதமும்
          தெரிவுற லரிய பலகலக் குப்பையும்
 
               (மானசவேகன் கண்ட காட்சி)
               19 - 26 : பத்திப்.........குப்பையும்
 
(பொழிப்புரை) அந்நகரத்தின்கண் அமைந்த நிரல்பட்ட பெருங்கொடிகளையும் பலவாகிய அழகிய சிறு கொடிகளையும் சித்திரித்து எழுதப்பட்ட கலைத்தொழிலமைந்த விமானங்களையும்,
பெரிய நிலத்தின்கண் தாமே இயங்குகின்ற பாவைகளையும் செய்தற்கரிய தொழில் நுட்பத்தையுடைய யவனர்கள் இயற்றிய எந்திரவமைப்புக்களையும், துளையுடைய கையையுடைய யானைகளையும், மிக்க பிடரி மயிரையுடைய குதிரைகளையும் சித்திரித்த மாலைகளையும் மக்கள் ஏறியாடும் இயந்திரத் தொட்டில்களையும் வெள்ளிய மாலைகளை இடும் விளக்க மமைந்த பூத உருவங்களையும் அறிதற்கரிய பலவேறு அணிகலக் குவியல்களையும் என்க.
 
(விளக்கம்) பத்தி - வரிசை. படாகை - பெருங்கொடி. பூங்கொடி - அழகிய கொடி. யானை புரவி முதலியன இயந்திரங்கள் என்க. பொத்த கை - துளையுள்ள கை மக்கள் ஏறியாடுந் தொட்டில் என்க. திருவிழாக்களில் மாந்தர், யானை, புரவி முதலிய உருவமைந்த ஊசல்களிலும் தொட்டிலிலும் ஏறியாடுதல் வழக்கம். இதனை இற்றை நாளிலுங் காணலாம். தாரொழுக்கும் பூதம் - மாலை சூட்டும் பூத உருவம். குப்பை - குவியல்.