பக்கம் எண் :

பக்கம் எண்:1083

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
         
    35    விண்மிசை யவரும் விழையுங் காரிகை
          மண்ணியன் மகளிரு ளுளள்கொன் மற்றெனச்
          சேணெடுந் தெருவுஞ் சிற்றங் காடியும்
          நாணொடு புணர்ந்த நலம்புணர் மகளிர்
          நெரியுந் தெருவு நிரம்பிய மறுகும்
    40    மன்றமுங் கோணமுஞ் சென்றுசென் றுலாஅய்
          யாறுகிடந் தன்ன வீறுசால் வீதிதொறும்
          ஆனாது திரிதரு மானச வேகன்
 
                  (இதுவுமது)
           35 - 42 : விண்மிசை........வேகன்
 
(பொழிப்புரை) இந்நில உலகத்தின்கண் வாழும் மகளிருள் வைத்து வானுலகத்தில் வாழும் தேவர்களும் விரும்புதற்குக் காரணமான பேரழகுடையாள் யாரேனும் இருப்பளோ ? இராளோ ? என்று ஐயுற்று அவ் வித்தியாதரர் மன்னன் அம்மகளிர் குழுக்களை ஆராய்ந்துணர்தற்பொருட்டு நாண் முதலிய பெண்மைக்குணங்க ளமைந்த அழகுடைய மகளிர் நெருங்கி நிற்கும் மிகவும் நீண்ட தெருக்களிடத்தும், சிற்றங்காடிகளிடத்தும், அம்மகளிர் நிரம்பிய அரச வீதிகளிடத்தும் மன்றங்களிடத்தும் குறுந்தெருக்களிடத்தும் சென்று சென்று திரிந்து பேரியாறுகள் கிடந்தாற்போன்று கிடக்கின்ற பெருமைமிக்க வீதிகளிலெல்லாம் ஒழியாது இங்ஙனம் திரிகின்ற அந்த மானசவேகன் என்க.
 
(விளக்கம்) விண்மிசையவர் - தேவர் : உம்மை உயர்வு சிறப்பு. சேணெடுந் தெரு - மிக நீண்ட தெரு. சிற்றங்காடி - சிறிய கடைத்தெரு. நெரியும் - நெருங்கி நிற்கும். கோணம் - குறுந்தெரு. யாறு வீதிகளுக்குவமை, வீறு - வேறொன்றற்கும் இல்லாதசிறப்பு. ஆனாது - ஒழியாமல்.