பக்கம் எண் :

பக்கம் எண்:1084

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          கோலக் கோயிலு நால்வகை நிலனும்
          புடைசூழ் நடுவட் பொன்மலர்க் காவின்
    45    இடைசூ ழருவி யேந்துவரைச் சென்னி
          ஆய்மயி லகவு மணிச்சுதைக் குன்றின்
          மீமிசை மருங்கின் மின்னென நுடங்கிப்
          பழவிறன் மூதூர் விழவணி நோக்கி
          மும்மணிக் காசும் பன்மணித் தாலியும்
    50    பொன்மணிக் கொடியும் பூணுஞ் சுடர
          மதன மஞ்சிகை நின்றோட் கண்டு
 
        (மானசவேகன் மதனமஞ்சிகையைக் காணல்)
              43 - 51 : கோலக்...........கண்டு
 
(பொழிப்புரை) செயற்கையாலே இயற்றப்பட்ட அழகிய கோயிலும் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்னும் நால்வகை நிலனும் பக்கத்தே ஆழ்ந்துள்ள நடுவிடமாகிய ஓரிடத்தே விளையாடுதற் பொருட்டு அமைக்கப்பட்ட பொன் மலர்களையுடைய ஒரு செயற்கைப் பூம்பொழிலின்கண் தன் நடுப்பகுதியில் தன்னைச் சூழ்ந்து வீழ்கின்ற அருவிகளையும் உயர்ந்த மூங்கிலையுடைய உச்சியினையுமுடைய அழகிய மயில்கள் அகவுகின்ற அழகிய சுதை தீற்றப் பெற்ற செய்குன்றின் உச்சியில் ஒரு பக்கத்தில் மின்னல் என அசைந்து பழைய வெற்றியினையுடைய முதிய அக்கோசம்பி நகரத்தின்கண் நிகழாநின்ற அழகிய திருவிழாக் காட்சியை நோக்கி மூன்று மணிகளாலியன்ற அணிகலனும் பலவாகிய மணிகளாலியன்ற தாலியும் அழகிய பொற்சரடும் இன்னோரன்ன பிற அணிகலன்களும் ஒளி வீசாநிற்ப நின்ற மதனமஞ்சிகையைக் கண்டு என்க.
 
(விளக்கம்) மானசவேகன் (42) காவின்கண் அமைந்த செய்குன்றின்மேல் விழவணி நோக்கிச் சுடர நின்ற மதனமஞ்சிகையைக் கண்டு என்க. நால்வகை நிலம், குறிஞ்சி முதலியன. ஈண்டு இவை அரசன் விளையாடற் பொருட்டு நால்வகை நிலத்தின் கருப்பொருள் முதலியன கொண்டு செயற்கையால் இயற்றப்பட்டன என்க. செயற்கை என்பது தோன்ற, பொன்மலர்க்கா என்றார். சுதைக்குன்று - செய்குன்று. மும்மணிக்காசு - மூன்றுவகை மணிகள் பதித்த பொற்காசாலாகிய ஒரு வகை அணிகலன். மும்மணியாவன புருடராகம், வைடூரியம், கோமேதகம் என்பன. 'மும்மணி யாவன சொன்ன புருடராக, முறுவயிடூரியங் கோமே தகமே என்றாங் கோதுவர்' (திருவால. 26 : 22) என்பதனானும் உணர்க. கொடி - சரடு. நின்றவளாகிய மதனமஞ்சிகையை என்க.