பக்கம் எண் :

பக்கம் எண்:1085

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          சென்றன னணுகி நின்றினிது நோக்கி
          வெள்ளி விமானம் விதிர்விதிர்த் தேறி
          வள்ளி மருங்கி னொள்ளிழை யேழையைக்
    55    கச்சார் வனமுலை விச்சா தரியே
          ஆவ ளென்னு மையமோ டயலதோர்
          தேவ மாடஞ் சேர்ந்தன னிருந்து
 
                   (இதுவுமது)
             52 - 57 : சென்றனன்............இருந்து
 
(பொழிப்புரை) அங்ஙனம் கண்டுழித் தன் உருவினை அவள் அறியாமல் மந்திரத்தாலே மறைத்துக் கொண்டு அவளை அணுகிச் சென்று இனிதாகக் கூர்ந்து நோக்கிக் கொடிபோன்ற இடையினையும் ஒள்ளிய அணிகலன்களையும் உடைய அம் மதனமஞ்சிகையை இவள் மானிடமகளல்லள் கச்சணிந்த அழகிய முலையுடைய விச்சாதர மகளே யாதல் வேண்டும் என்னும் மயக்க உணர்ச்சியோடே காமமயக்கமும் மிகுதலால் உடலும் உள்ளமும் நடுங்கித் தனது வெள்ளி விமானத்தின்கண் ஏறிப் பக்கத்திலுள்ள ஒரு திருக்கோயிலின் மாடத்தின்மேல் இறங்கி அங்கு நின்று என்க.
 
(விளக்கம்) அணுகி நின்று என்றதனால் உருக்கரந்தமை பெற்றாம். விதிர் விதிர்த்து - நடுங்கி. வள்ளி - கொடி. ஏழையை : மதனமஞ்சிகையை. மானிட மகளிரில் இத்துணைப் பேரழகுடையாரை அவன் கண்டிலனாதலின் இவள் விச்சாதரியே என்று கருதினான். கால் நிலந்தோய்தலின் விச்சாதரி அல்லளோ என்று ஐயமுற்றான் என்க. தேவ மாடம் - தெய்வக் கோயிலின் மாடம். விமானம் ஏறி - மாடம் சேர்ந்து இருந்து என்க.