பக்கம் எண் :

பக்கம் எண்:1086

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          வருவோர்ப் பற்றி வாங்குபு விழுங்கும்
          இனைய நுட்பத் தியவன ரியற்றிய
    60    பெருவலிப் பூதத் துருவுகண் டுணரார்
          இன்னுயி ருண்ணுங் கூற்ற மிதுவெனப்
          பொன்னிழை சுடரப் பொம்மென வுராஅய்
          மைகொள் கண்ணியர் வெய்துயிர்த் திரிய
          மாவீ ழோதி மதனமஞ் சிகையும்
    65    ஏயென வஞ்சுஞ் சாய னோக்கி
 
        (மதனமஞ்சிகை மண்ணீடாகிய பூதவடிவத்தினைக் 
                 கண்டு அஞ்சுதல்)
             58 - 65 : வருவோர்ப்...........நோக்கி
 
(பொழிப்புரை) அந்தச்செய்குன்றத் துச்சியின்கண் யவனச் சிற்பிகள் ஆங்கு வருவோரைக் கையாற் பிடித்து இழுத்து விழுங்குவது போலத் தோன்றும்படி அமைத்துள்ள இத்தகையதொரு நுணுகிய தொழில்திறத்தோடு கூடிய பெரிய வலிமையினையுடைய பூத வடிவத்தை மதனமஞ்சிகையும் அவள் தோழிமாரும் கண்டுழி அது சிற்பம் என்று உணரமாட்டாராய் இனிய உயிரை உண்ணுகின்ற மறலியே இஃதென்று நினைத்தவராய் மைதீட்டப்பட்ட கண்ணையுடைய தோழிமாரெல்லாம் அச்சத்தால் நடுங்கி வெய்தாக மூச்செறிந்து ஞெரேலென்று அவ்விடத்தினின்றும் பெயர்ந்து கெட்டோடாநிற்ப, வண்டுகள் வீழுகின்ற கூந்தலையுடைய மதனமஞ்சிகையும் அவர்களுடன் ஓடாளேனும் அவ்விடத்தே நின்று ''ஏஎ'' என்று அஞ்சுகின்ற அவளது மென்மைத் தன்மையைக் கூர்ந்து நோக்கி என்க.
 
(விளக்கம்) மானசவேகன் மாடத்திலிருந்து பூதத்தைக் கண்டு அஞ்சும் மதனமஞ்சிகையின் சாயலை நோக்கி என்க. பூதம் - சிற்பத்தால் செய்யப்பட்ட பூத உருவம். அவ் வுருவந்தானும் எதிர்வருவோரைப் பிடித்து விழுங்க வருவதுபோல இரு கைகளையும் நீட்டி வாயங்காந்து வெகுண்ட தோற்றத்தோடு நுட்பமாக வெகுளி முதலிய மெய்ப்பாடு தோன்ற அமைக்கப்பட்டிருத்தலின் அதனை முதன் முதலாகக் கண்ட மகளிர் சிற்பமென்றுணராது கூற்றுவன் என்று அஞ்சி ஓடினர் என்பது கருத்து. மதனமஞ்சிகை அஞ்சினாளேனும் தோழிமாரோடு ஓடாது நிற்றல் அவளது தலைமைத் தன்மையை விளக்குதல் அறிக. யவனர் - யவன நாட்டுச் சிற்பிகள். கூற்றம் - மறலி. பொம்மென : குறிப்பு மொழி. உராய் - இடம் பெயர்ந்து. இரிய - கெட்டோட. மா - வண்டு. ''ஏ'' என : குறிப்பு மொழி. அஞ்சுங்கால் மென்மைத் தன்மை மிக்குத் தோன்றலின் அஞ்சும் சாயலை நோக்கி என்றார்.