உரை |
|
5. நரவாண காண்டம் |
|
9. மதனமஞ்சிகை பிரிவு |
|
விச்சை மன்ன னச்சுவன
னாகி விறல்கெழு
விஞ்சையர் வெள்ளியம் பெருமலை
இறைகொண் டிருந்த வெழிலுடை
மகளிருள் யாவரு
மில்லைமற் றிவளோ ரனையார் 70 யாவ
ளாயினு மெய்துவென் யானென
ஒருதலை வேட்கை யுண்ணின்று
நலியப் பெருவினை
விச்சையிற் றெரிய நோக்கி |
|
(மானசவேகன்
எண்ணுதல்)
66 - 72 : விச்சை..........நோக்கி |
|
(பொழிப்புரை) விச்சாதர
வேந்தனாகிய அம் மானசவேகன் அவளைப் பெரிதும் காமுற்று, 'வெற்றி பொருந்திய
விச்சாதரருடைய பெரிய அழகிய வெள்ளிமலையின்கண் வதிகின்ற அழகுடைய விச்சாதர
மகளிருள்ளும் இவளை நிகர்ப்பவர் யாரும் இல்லை. இவள் விச்சாதர மகளேயாயினும் அன்றி
மானிட மகளேயாயினும் அன்றிப் பிறர் யாரேயாயினும் இவளை யான் காதலியாக எய்துவேன்
என்று உறுதிகொண்டு ஒருதலைக்காம நோய் தன் நெஞ்சில் நின்று வருத்தாநிற்பப் பெரிய
செயல்களையுடைய தனது வித்தையாலே அவள் வரலாறெல்லாம் கூர்ந்துணர்ந்து
என்க. |
|
(விளக்கம்) விச்சை மன்னன் - விச்சாதர மன்னன்
; மானசவேகன். நச்சுவனனாகி - விரும்பியவனாய். விறல் - வெற்றி. இறை கொண்டு -
தங்கி. இவள் ஓரனையார் - இவளையொத்தவர். ஒருதலை வேட்கை - ஆண் பெண் இருவருள் ஒருவர்
ஒருவரை விரும்ப மற்றவர் விரும்பாதவிடத்து அவ் விருப்பம் ஒருதலை வேட்கை எனப்படும்.
இதனைக் கைக்கிளை என்றுங் கூறுப. தெரிய நோக்கி - அவள் வரலாறெல்லாந் தெரியும்படி
நோக்கி. |