பக்கம் எண் :

பக்கம் எண்:1088

உரை
 
5. நரவாண காண்டம்
 
9. மதனமஞ்சிகை பிரிவு
 
          உயர்நிலை யுலகத் தவரும் பிறரும்
          மேனிலை யுயர்ச்சியின் மெய்யா மதிக்க
    75    வளமை நன்னிலத் திளமுளை போந்து
          கல்வி நீரிற் கண்விட்டுக் கவினிச்
          செல்வப் பல்கதிர் செறிந்துவனப் பேறி
          இன்பம் விளைந்த நன்பெரு நெல்லின்
          ஆண மடையிற் காண்வரப் பற்றித்
    80    துப்புர வடிவி....தோயினும்
          வேட்கை நாவின் விருப்பொடு சுவைக்கும்
          மாற்ற லில்லா மனத்தின ராகி
 
        (நரவாணதத்தனும் மதனமஞ்சிகையும் இன்புறுதல்)
            73 - 82 : உயர்நிலை............மனத்தினராகி
 
(பொழிப்புரை) நரவாணதத்தனும் மதனமஞ்சிகையும் மேனிலையுலகத்தில் வாழுந் தேவர்களும் ஏனையோரும் தமது நிலையினை மேலான உயர்ச்சியையுடைய மெய்ந் நிலை என்று மதிக்கும்படி தமது அழகு என்னும் நல்ல நிலத்தின்கண் இளமையாகிய முளை தோன்றிக் கல்வி என்னும் நீர் கால் யாத்தலாலே, கணுக்கள் விட்டு அழகெய்திச் செல்வம் என்னும் பலவாகிய கதிர்களை ஈன்று செறிந்து அழகேறி இன்பம் என்னும் பயன் விளையப் பெற்ற நல்ல பெரிய காமப்பைங் கூழாகிய நெல்லினது அன்பாகிய சோற்றினை யாவரும் காணுதலுண்டாகக்
கைப்பற்றி (துப்புரவடிவி...தோயினும்?) வேட்கை என்னும் தமது நாவினாலே விருப்பத்தோடு சுவைத்துண்ணும் மாறுபாடில்லாத மனத்தையுடையராய் என்க.
 
(விளக்கம்) உயர்நிலை யுலகத்தவர் - தேவர். பிறர் என்றது - இருடி முதலியோரை. வளமை - அழகு. இளமுளை - இளமையாகிய முளை. ஆணமடை - அன்பாகிய உணவு. வேட்கையாகிய நா என்க. சுவைக்கும் மனம் மாற்றல் இல்லா மனம் எனத் தனித்தனி கூட்டுக. மாற்றல் - மாறுபாடு.